
மார்ச் 3, 2011
நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி சர் சி.வி.ராமன் -- லோகசுந்தரி தம்பதிக்கு மகனாக, சென்னை, தண்டையார்பேட்டையில், 1929, மே 18ல் பிறந்தவர் ராதாகிருஷ்ணன்.
இவர், சென்னையில் பள்ளி படிப்பையும், மைசூரு பல்கலை, பெங்களூரு ஐ.ஐ.டி.,யில் பட்டம், ஆய்வு படிப்புகளை முடித்தார். ஸ்வீடன், ஆஸ்திரேலிய நாடுகளில் ஆய்வு விஞ்ஞானியாகவும், பேராசிரியராகவும் பணியாற்றினார்.
கடந்த 1972ல் தாயகம் திரும்பி, ராமன் ஆய்வு நிறுவனத்தின் இயக்குனரானார். ஆம்ஸ்டர்டாம் பல்கலையின், 'டாக்டர் ஹானரீஸ் கவுசா' பட்டம் பெற்ற இவர், உலக வானியல், ரேடியோ அறிவியல் கூட்டமைப்புகளின் தலைவராகவும் இருந்தார்.
சூப்பர் நோவா குறித்த ஆய்வறிக்கை உள்ளிட்ட, 80க்கும் மேற்பட்ட ஆய்வறிக்கைகளை சர்வதேச ஆய்வரங்குகளில் சமர்ப்பித்தார். 'ஜர்னல் ஆப் ஆஸ்ட்ரோ பிசிக்ஸ் அண்ட் அஸ்ட்ரானமி' இதழின் ஆசிரியராக இருந்து, அறிவியலை பொதுவெளிக்கு கொண்டு வந்தார்.
தந்தையின் புகழ் வெளிச்சத்தை கடந்து சாதித்து, 2011ல், தன் 82வது வயதில், இதே நாளில் மறைந்தார். இவரது நினைவு தினம் இன்று!

