
மார்ச் 4, 1980
கர்நாடக மாநிலம், பெங்களூரில், 1980ல் இதே நாளில் பிறந்தவர் ரோஹன் போபண்ணா. இவர், தன் குடும்பத்தின் காபி தோட்டம் உள்ள கூர்க்கில் குடியேறி அங்கு படித்தார். சிறுவயதில் ஹாக்கி, கால்பந்து விளையாட்டுகளில் ஈடுபட்டு, 11 வயதுக்குப் பின் டென்னிஸ் விளையாட்டுக்கு மாறினார். 19வது வயதுக்குப் பின், டென்னிசை தன் முழுநேர தொழிலாக்க திட்டமிட்டார்.
முதலில் ஒற்றையர் ஆட்டத்தில் ஈடுபட்ட இவர், பின் இரட்டையர் போட்டிகளில் பங்கேற்று, சாதிக்க துவங்கினார். 2003ல், ஆப்ரோ - ஆசிய இரட்டையர் போட்டியில் வெற்றி பெற்றார். ஏ.டி.பி., சேலஞ்சர்சில் வெற்றி பெற்ற இவர், 2008ல் அமெரிக்காவின் எரிக் போடோரோக்குடன் இணைந்து, லாஸ் ஏஞ்சல்ஸ் ஓபனை வென்றார். 2010ல் ஐசம் உல்ஹக் குரேஷியுடன் சேர்ந்து கிராண்ட்ஸ்லாம் இறுதிப் போட்டிக்கு முன்னேறியதுடன், தென் ஆப்பிரிக்கா ஓபன் போட்டியை வென்றார்.
அடுத்தடுத்த ஆண்டுகளில் பிரெஞ்சு ஓபன், வியன்னா ஓபன், ஆசிய போட்டி, ஆஸ்திரேலிய கிராண்ட்ஸ்லாம், கத்தார் ஓபன் உள்ளிட்ட போட்டிகளில் வென்றார். தற்போது, மேத்யூ எப்டன் உடன் இணைந்து கிராண்ட்ஸ்லாம் வென்றுள்ளார். இவரது 44வது பிறந்த தினம் இன்று!

