
மார்ச் 6, 1938
கர்நாடக மாநிலம், பெங்களூரில், கல்வியாளர் சி.வி.வெங்கடராமய்யாவின் மகனாக 1938ல் இதே நாளில் பிறந்தவர் சி.வி.விஸ்வேஸ்வரா. சிறு வயதில், இலக்கியம், இசையின் மீது ஆர்வமாக இருந்த இவர், மைசூரு பல்கலையில் இயற்பியலில் எம்.எஸ்சி., பட்டம் பெற்றார்.
அமெரிக்காவின் கொலம்பியா பல்கலையில் உயர்கல்வி கற்றார். மேரிலாண்ட் பல்கலையில், அணுத்துகள் பற்றிய படிப்பை முடித்தார். நாசாவின் உயராய்வு பணிகளில் ஈடுபட்டார். ஐன்ஸ்டீனின் கொள்கைகளை ஒட்டி விண்வெளியின் கருந்துளை குறித்த ஆய்வுகளில் ஈடுபட்டார்.
தொடர்ந்து, நியூயார்க், பாஸ்டன், பிட்ஸ்பர்க் பல்கலைகளில் பேராசிரியராகி அறிவியலை பரப்பினார். 130 கோடி ஆண்டுகளுக்கு முன்பிருந்த இரண்டு ராட்சத கருந்துளைகள், ஒன்றையொன்று சுற்றிக்கொண்டே மோதிய போது ஏற்பட்ட ஈர்ப்பலைகளின் வடிவத்தை வரைந்து, பாராட்டு பெற்றார்.
பெங்களூரு கோளரங்கத்தின் நிறுவன இயக்குனர், ராமன் ஆய்வு மையம் உள்ளிட்டவற்றின் இயக்குனராகி அறிவியலை வளர்த்த இவர், 2017, ஜனவரி 16ல் தன் 79வது வயதில் மறைந்தார்.
இந்தியாவின், 'கருந்துளை' நாயகன் பிறந்த தினம் இன்று!

