
மார்ச் 9,1954
திருச்சி லோகநாதன் - ராஜலட்சுமி தம்பதிக்கு மகனாக, 1954ல் இதே நாளில் பிறந்தவர், டி.எல்.மகாராஜன். இவரது தந்தை திரைப்பட பின்னணி பாடகர் என்பதால் இவரும் இசை கற்று, தன் 10வது வயதில், வள்ளலார் திரைப்படத்தில் நடித்து பாடினார்.
தொடர்ந்து, 'திருவருட்செல்வர்' திரைப்படத்தில், 'காதலாகி கசிந்து...' என்ற பாடலை டி.எம்.சவுந்தரராஜனுடன் இணைந்து பாடினார். அடுத்து, திருமால் பெருமை, இன்று போய் நாளை வா உள்ளிட்ட படங்களில் பாடினார். இவர், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், புதிய மன்னர்கள் படத்தில் பாடிய, 'நீ கட்டும் சேலை மடிப்புல நான் கிறங்கி போனேண்டி...' என்ற பாடல் கல்லுாரி மாணவர்களால் கொண்டாடப்பட்டது.
இவரது அய்யப்பன், கணபதி, முருகன், பைரவர் உள்ளிட்ட தெய்வங்களின் மீதான பக்திப் பாடல் ஆல்பங்களும், ஆன்மிகவாதிகளிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. தற்போது பிரபல, 'டிவி'க்களில் ஒளிபரப்பாகும் சங்கீத நிகழ்ச்சிகளுக்கு நடுவராக செயல்படுகிறார்.
பாடகர், நடிகர், இசையமைப்பாளர் எனும் பன்முக கலைஞரின், 70வது பிறந்த தினம் இன்று!