
மார்ச் 10, 1979
சேலம் மாவட்டம், ஆத்துாரில் துரைசாமி - பூங்கோதை தம்பதிக்கு மகனாக, 1921, ஜூலை 22ல் பிறந்தவர் எஸ்.டி.சுந்தரம். பள்ளியில் படித்த போதே இலக்கியங்களை மனனம் செய்தார். 12வது வயதில், நவாப் ராஜமாணிக்கம் பிள்ளை நாடக குழுவில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். இவரின் தமிழார்வத்தைப் பார்த்த ராஜமாணிக்கம், திருவையாறு அரசு கலைக் கல்லுாரியில் சேர்த்தார்.
அப்போது, 'வெள்ளையனே வெளியேறு' போராட்டத்தில் ஈடுபட்டு சிறை சென்றார். அங்கு, 'கவியின் கனவு' என்ற நாடகத்தை எழுதினார்; விடுதலையானதும், சக்தி நாடக சபாவை துவக்கினார்.
'வித்வான்' படிப்பை முடித்து, மோகினி, லைலா மஜ்னு, ரோகினி, அவன், கள்வனின் காதலி, சாரங்கதாரா, கப்பலோட்டிய தமிழன் உள்ளிட்ட படங்களுக்கு வசனம் எழுதினார்.
தமிழக சட்ட மேலவை உறுப்பினர், தமிழக இயல் இசை நாடக மன்ற செயலர் உள்ளிட்ட பதவிகளை வகித்த இவர், 1979ல், தன் 58வது வயதில் இதே நாளில் மறைந்தார்.
முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர்., -- ஜானகி அறிமுகமான, மோகினி படத்தின் வசனகர்த்தா மறைந்த தினம் இன்று!

