
மார்ச் 14, 1947
தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதுாரில், ஹரிகதா விற்பன்னர் டி.எஸ்.பாலகிருஷ்ண சாஸ்திரியின் மகனாக, 1947ல் இதே நாளில் பிறந்தவர் டி.எஸ்.பி.கே.மவுலி.
இவர் பள்ளி பருவத்திலேயே, டி.கே.சண்முகம், சிங்காநல்லுார் வெங்கட்ராம அய்யர், சகஸ்ரநாமம் உள்ளிட்டோரின் நாடகங்களில் நடித்தார். பி.டெக்., முடித்த இவர், தன் 19வது வயதில், சிவாஜியின் பத்மஸ்ரீ விருது நிகழ்ச்சிக்காக எழுதிய,45 நிமிட நாடகத்தால் புகழ் பெற்றார். ஒய்.ஜி.பார்த்தசாரதி நாடக குழுவிலும் நடித்த இவர், 'பிளைட் நம்பர் 172' என்ற நாடகத்தை எழுதி, நடித்தார்.
இவர்கள் வித்தியாசமானவர்கள் என்ற திரைப்படத்தை இயக்கினார். தொடர்ந்து, மற்றவை நேரில் என்ற படத்தை, 25 நாட்களில் இயக்கி, 100 நாட்கள் ஓட வைத்தார். கே.பாலச்சந்தரின் தயாரிப்பில், அண்ணே அண்ணே, ஒரு புல்லாங்குழல் அடுப்பூதுகிறது, நிழல் நிஜமாகிறது உள்ளிட்ட படங்களை இயக்கினார்.
தெலுங்கிலும் பல படங்களை இயக்கினார். காதலா, காதலா, நள தமயந்தி உள்ளிட்ட சில தமிழ் படங்களில் நடித்துள்ளார். பல தொலைக்காட்சி தொடர்களையும் இயக்கியுள்ளார். இவரது, 77வது பிறந்த தினம் இன்று!

