
மார்ச் 15, 1956
கன்னியாகுமரி மாவட்டம், பூதபாண்டியைச் சேர்ந்த வேலாயுதத்தின் மகனாக, கோவையில், 1956ல் இதே நாளில் பிறந்தவர் ஜீவானந்தன் எனும் ஜீவா.
தந்தை வேலாயுதம், கோவையில் சினிமா பேனர் ஆர்ட்டிஸ்டாக இருந்தவர். இவர், கோவை அரசு கலைக் கல்லுரியில் பி.ஏ., சென்னை மாநிலக் கல்லுாரியில் எம்.ஏ., அரசியல், கோவை சட்டக் கல்லுாரியில் சட்டமும் படித்தார்.
தந்தை இறந்த பின், பேனர் நிறுவனத்துக்கு பொறுப்பேற்றார். நவீன ஓவியங்களை வரையும் வல்லமை பெற்ற இவர், கோவை ஓவியர்களுடன் இணைந்து, 'சித்ரகலா அகாடமி' எனும் அமைப்பை உருவாக்கி, தற்போது அதன் தலைவராக உள்ளார்.
இவரது ஓவியங்கள் சென்னை வள்ளுவர் கோட்டம், மஹாராஷ்டிரா அரசின் 'அஜந்தா' ஆவணங்கள் உள்ளிட்டவற்றிலும், வெளிநாடுகளின் அரசு ஆவண காப்பகங்களையும் அலங்கரிக்கின்றன. இவர் எழுதிய 'திரைச்சீலை' நுால், இந்திய தேசிய திரைப்பட விருதை வென்றது.
ஓவியர், சினிமா விமர்சகர், வழக்கறிஞர் எனும் பன்முக கலைஞனின் 68வது பிறந்த தினம் இன்று!

