
மார்ச் 17, 1935
தேனி மாவட்டம், பெரியகுளத்தில் ஸ்ரீனிவாச அய்யங்கார் - பத்மாசினி தம்பதியின் மகனாக, 1935ல் இதே நாளில் பிறந்தவர் சுந்தர்ராஜன். பள்ளி, கல்லுாரி நாடகங்களில் நடித்த இவர், தன் சித்தப்பா வீரராகவன் சென்னையில் நாடக நடிகராக இருந்ததால், சென்னை, தொலைபேசி துறையில் பணியில் சேர்ந்து, ஓய்வு நேரங்களில் மேடை நாடகங்களில் நடித்தார்.
பட்டினத்தார் திரைப்படத்தில் சோழ மன்னர் வேடத்தில் அறிமுகமானார். கே.பாலசந்தர் இயக்கத்தில், மேஜர் சந்திரகாந்த் என்ற படத்தில், ஓய்வு பெற்ற பார்வையற்ற ராணுவ மேஜராக நடித்ததால், 'மேஜர்' சுந்தர்ராஜன் ஆனார்.
சர்வர் சுந்தரம், எதிர்நீச்சல், பாமா விஜயம், ஞான ஒளி, வசந்த மாளிகை, தங்கப்பதக்கம், அபூர்வ ராகங்கள் உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்தார்.
பல மேடை நாடகங்கள், தொலைக்காட்சி தொடர்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்ததுடன், தெலுங்கு, மலையாள திரைப்படங்களிலும் நடித்தார். சிவாஜி கணேசனுடன் இணைந்து தமிழக முன்னேற்ற முன்னணி, ஜனதா தளம் ஆகிய கட்சிகளில் செயல்பட்டார். தன் 68வது வயதில், 2003, பிப்ரவரி 28ல் மறைந்தார்.
வெற்றி விழா படமான, கல்துாண் இயக்கியவரின் பிறந்த தினம் இன்று!

