
மார்ச் 21, 2016
சென்னையில், 'அக்கவுன்டன்ட் ஜெனரலாக' இருந்த ஞானசாகரத்தின் மகனாக, 1926, ஜனவரி 1ல் பிறந்தவர் ஆனந்தகிருஷ்ணன் எனும், 'பிலிம் நியூஸ்' ஆனந்தன்.
பள்ளி மாணவராக இருந்தபோது, இவரின் அப்பா பாக்ஸ் கேமராவை பரிசளித்தார். அதில் படம் எடுத்து பழகினார். கல்லுாரியில் படித்த போது, ரோலிபிக்ஸ் கேமராவை வாங்கி, சிவாஜியை படம் எடுத்து பத்திரிகைகளுக்கு அனுப்பினார்.
பாலசந்தர், ஒய்.ஜி.பார்த்தசாரதி நாடக குழுக்களில் எழுத்தாளராகவும், நடிகராகவும் இருந்தார். நாடோடி மன்னன் திரைப்பட ஸ்டில்களை பத்திரிகைகளில் பிரபலமாக்கி, மக்கள் தொடர்பாளர் என்ற புதிய பணியை துவங்கினார். தேவராஜனின், 'பிலிம் நியூஸ்' பத்திரிகையில் இவரின் படங்கள், 'பிலிம் நியூஸ்' ஆனந்தன் என்ற பெயரில் வெளியானது.
போலீஸ்காரன் மகள், ஊமை விழிகள், சுகமான சுமைகள் உள்ளிட்ட படங்களில் நடித்தார். 'சாதனைகள் படைத்த தமிழ் திரைப்பட வரலாறு' என்ற ஆவண நுாலை எழுதிய இவர், 2016ல் தன் 90வது வயதில் இதே நாளில் மறைந்தார்.
தமிழ் திரையுலகின் நடமாடும் தகவல் களஞ்சியம் மறைந்த தினம் இன்று!

