
ஏப்ரல் 14, 1927
கடலுார் மாவட்டம், பண்ருட்டிக்கு அருகில் உள்ள திருவதிகையில், புகழ்பெற்ற கர்நாடக இசைப்பாடகி பண்ருட்டியம்மாள் எனும் ஆதிலட்சுமியின் மகளாக, 1927ல் இதே நாளில் பிறந்தவர், பி.ஏ.பெரியநாயகி.
இவரின் சகோதரி, பி.ஏ.ராஜாமணி, ஊர்வசியின் காதல் என்ற திரைப்படத்தில் நடித்தார். அதில், பெரியநாயகியும் அறிமுகமானார். இவர், தன் தாயிடமும், பத்தமடை சுந்தர அய்யரிடமும் கர்நாடக இசை கற்று, கச்சேரி செய்தார்.
இவரது குரல் வளம், பாடும் திறமையால், ஏ.வி.எம்., தயாரித்த, சபாபதி படத்தில் இரண்டு பாடல்களை பாடும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. தொடர்ந்து, பஞ்சாமிர்தம், என் மனைவி, கூண்டுக்கிளி, மனோன்மணி, வேதாள உலகம் உள்ளிட்ட பல படங்களில் நடித்து, பாடவும் செய்தார்.
கடந்த, 1945ல் வெளியான, ஸ்ரீ வள்ளி படத்தின் நாயகி ருக்மணிக்கு பின்னணி குரல் கொடுத்தார். தொடர்ந்து, சிறு சிறு வேடங்களில் நடித்த இவர், ஏகம்பவாணன் படத்தில் நாயகியானார்.
தமிழ் திரையில், சகலகலா வல்லியாக வலம் வந்த, பி.ஏ.பெரியநாயகி, தன், 63வது வயதில், 1990, ஜூன் 8ல் மறைந்தார். இவரது பிறந்த தினம் இன்று!

