PUBLISHED ON : ஏப் 28, 2025 12:00 AM

ஏப்ரல் 28, 1925
சென்னை, கொருக்குப்பேட்டையில், தொழிலதிபரான அய்யப்பச் செட்டியார் - வள்ளியம்மாள் தம்பதியின் மகனாக, 1852, ஏப்ரல், 27ல் பிறந்தவர், 'சர்' பிட்டி தியாகராயர்.
இவர், சென்னை மாநில கல்லுாரியில் பட்டம் பெற்று நெசவு, தோல் பதனிடுதல், உப்பளம், சுண்ணாம்பு காளவாய் உள்ளிட்ட தொழில்களை செய்தார். படகு களில், சரக்கு போக்குவரத்தை கையாண்டார். நெசவாளர் மாநாடு, கண்காட்சிகளை நடத்தி, நெசவில் புதிய தொழில்நுட்பங்களை மேம்படுத்தினார். சென்னையில் நடந்த மூன்றாவது தேசிய காங்கிரஸ் மாநாட்டிற்கு தலைமை ஏற்று, மகாத்மா காந்தியை வரவேற்றார்.
இவரின் தறியில் நெய்த காந்தி, தன் மகன்களையும் பயிற்சிக்காக இவரிடம் அனுப்பினார். காங்கிரஸ் கட்சியில் நிலவிய வேறுபாட்டால் வெளியேறி, சென்னை மகாஜன சங்கத்தை துவக்கினார். 1916, நவம்பர் 20ல், தென்னிந்திய நல உரிமை சங்கத்தையும், 'நீதி' இதழையும் துவக்கினார். அது, நீதிக்கட்சியாக மாறியது.
அதன் தலைவரான இவர் சென்னை மேயராகி, மதிய உணவு திட்டத்தை செயல்படுத்தினார். 1921 தேர்தலில் வெற்றி பெற்றாலும், சுப்பராயலுவை முதல்வராக்கினார். சென்னையில் பல கோவில்களுக்கு நன்கொடை அளித்த இவர், தன், 73வது வயதில், 1925ல் இதே நாளில் மறைந்தார்.
மதுரை தியாகராயர் கல்லுாரி உள்ளிட்ட நிறுவனங்களின் நிறுவனர் மறைந்த தினம் இன்று!

