PUBLISHED ON : மே 24, 2025 12:00 AM

மே 24, 1981
துாத்துக்குடி மாவட்டம், திருச்செந்துார் அருகே காயாமொழி கிராமத்தில், சிவந்தி ஆதித்தன் - கனகம் தம்பதியின் மகனாக, 1905 செப்டம்பர் 27ல் பிறந்தவர் சி.பா.ஆதித்தனார்.
இவர், பிரிட்டனில் சட்டம் படித்தார். அங்கிருந்தபடியே தென்னாப்ரிக்க, இந்திய பத்திரிகைகளுக்கு செய்தி கட்டுரைகளை அனுப்பினார். நாடு திரும்பி, 'குடியரசு' பத்திரிகையில் கட்டுரைகள் எழுதினார். பின், சிங்கப்பூர் சென்று வழக்கறிஞராக பணியாற்றி நாடு திரும்பினார்.
கடந்த 1942ல், 'தமிழன்' எனும் வார இதழையும், 'தினத்தந்தி' எனும் நாளிதழையும் துவக்கினார். தொடர்ந்து, 'ராணி' உள்ளிட்ட பல இதழ்களை துவக்கினார்.
அவற்றில், சாதாரண மக்கள் பயன்படுத்தும் மொழி நடையை அறிமுகப்படுத்தி, நாட்டு நடப்புகளை சாமானியர்களும் அறிய வழிவகுத்தார். 'நாம் தமிழர்' கட்சியை துவங்கி, பல போராட்டங்களில் பங்கேற்றார்.
தி.மு.க.,வில் இருந்த இவர், அண்ணாதுரை, கருணாநிதி ஆட்சியில் சபாநாயகர், அமைச்சர் பதவிகளை வகித்துள்ளார். இவர், தன் 76வது வயதில், 1981ல் இதே நாளில் மறைந்தார்.
இவரது நினைவு தினம் இன்று!

