
ஜூன் 9, 2011
மஹாராஷ்டிர மாநிலம், சோலாப்பூர் மாவட்டம், பண்டர்புரில், போரா எனும் முஸ்லிம் பிரிவினர் குடும்பத்தில், 1915, செப்டம்பர் 17ல் பிறந்தவர் மக்புல் பிதா ஹுசேன் எனும் எம்.எப்.ஹுசேன்.
சிறு வயதிலேயே இவர் தாயை இழந்தார். தந்தை, இந்துாரில் குடியேறியதால், இவரும் அங்குள்ள துவக்கப்பள்ளி மற்றும் மும்பை ஜே.ஜே., கலைப்பள்ளியில் படித்தார். மும்பையில் திரைப்பட விளம்பர தட்டிகளில் ஓவியம் வரைந்தார். படிப்படியாக இவரின் ஓவியங்கள், அமெரிக்கா மற்றும் ஐரோப்பா நாடுகளில் வணிக ரீதியாக வெற்றி பெற்றன.
இவர், த்ரூ த ஐஸ் ஆப் எ பெயின்டர் என்ற சினிமா படத்தை தயாரித்தார். அது, பெர்லின் திரைப்பட விழாவில், விருது பெற்றது. நடிகை மாதுரி தீட்ஷித்தின் தீவிர ரசிகரான இவர், கஜகாமினி என்ற படத்தில், அவரை நடிக்க வைத்து இயக்கினார். நடிகை தபுவை, மீனாக் ஷி - எ டேல் ஆப் த்ரி சிட்டீஸ் என்ற திரைப்படத்தில் நடிக்க வைத்து, இயக்கினார். பிரபல, 'போர்ப்ஸ்' இதழ், 'இந்தியாவின் பிக்காசோ' என, இவரை பாராட்டியது. அதே சமயம், ஹிந்து கடவுள்களை அவமதிப்பது போன்ற சர்ச்சைக்குரிய ஓவியங்களை இவர் வரைந்ததால், பொதுநல வழக்கில் சிக்கினார். பின், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகளின் துபாய் நகரில் குடியேறிய இவர், தன், 96வது வயதில், 2011ல் இதே நாளில் மறைந்தார்.
பிரபல ஓவியர், எம்.எப்.ஹுசேனின் நினைவு தினம் இன்று!

