
ஜூன் 28, 1921
-ஒருங்கிணைந்த ஆந்திராவின் வாரங்கல் மாவட்டம், லக்னேபள்ளி கிராமத்தில், சீதாராமா ராவ் - ருக்மாபாய் தம்பதியின் மகனாக, 1921ல் இதே நாளில் பிறந்தவர், பமுலபர்த்தி வெங்கட நரசிம்ம ராவ் எனும் பி.வி.நரசிம்ம ராவ்.
இவர், கட்கரு கிராம பள்ளி, உஸ்மானியா பல்கலை, நாக்பூர் ஹஸ்லாப் கல்லுாரிகளில் சட்டம் படித்தார். வழக்கறிஞரான இவர், காங்கிரசில் இணைந்து, ஆந்திராவில் அமைச்சர், முதல்வர் பொறுப்புகளை வகித்தார்.
கடந்த 1977க்கு பின் தேசிய அரசியலுக்கு சென்றவர் மத்திய உள்துறை, பாதுகாப்பு, வெளியுறவு துறைகளின் அமைச்சர், காங்கிரஸ் தலைவர் பொறுப்புகளை வகித்தார். 1991ல் ராஜிவ் படுகொலைக்கு பின் பிரதமரானார். பொருளாதார நிபுணரான மன்மோகன் சிங்கை நிதியமைச்சராக நியமித்து, தாராளமய கொள்கைகளை அமல்படுத்தினார்.
எதிர்க்கட்சி தலைவர்களான சுப்பிரமணிய சுவாமிக்கு சர்வதேச வர்த்தக ஆணைய தலைவர், வாஜ்பாய்க்கு ஐ.நா.,வுக்கான இந்திய பிரதிநிதி வாய்ப்புகளை வழங்கினார். இவர், தன் 83வது வயதில், 2004, டிசம்பர் 23ல் மறைந்தார்.
ஆந்திரா, மஹாராஷ்டிரா, ஒடிஷா மாநிலங்களில் இருந்து லோக்சபாவுக்கு தேர்வு செய்யப்பட்டவர் என்ற பெருமை பெற்ற பி.வி.நரசிம்ம ராவின் பிறந்த தினம் இன்று!

