
செப்டம்பர் 6, 1911
செங்கல்பட்டு மாவட்டம், ஒழலுாரில், விஸ்வநாத முதலியாரின் மகனாக, 1911ல் இதே நாளில் பிறந்தவர் ஒ.வி.அழகேசன்.
இவர், தன் சொந்த ஊரில் பள்ளி படிப்பை முடித்து, சென்னை மாநில கல்லுாரியில் படித்த போது, காங்கிரசில் சேர்ந்து, உப்பு சத்தியாகிரகத்தில் பங்கேற்று, சிறை சென்றார். தொடர்ந்து, சட்ட மறுப்பு இயக்கம், தனி நபர் சத்தியாகிரகம், வெள்ளையனே வெளியேறு உள்ளிட்ட சுதந்திர போராட்டங்களில் ஈடுபட்டார்.
சுதந்திரத்துக்கு பின், அரசியலமைப்பு சபையிலும், தற்காலிக பார்லிமென்டிலும் உறுப்பினராக இருந்தார். செங்கல்பட்டு, திருத்தணி, அரக்கோணம் தொகுதிகளின் எம்.பி.,யாக தேர்வாகி, மத்திய அரசில் சுரங்கம், பெட்ரோலிய துறைகளின் அமைச்சராகவும் பொறுப்பேற்றார்.
சென்னை மணலியில் பெட்ரோலிய சுத்திகரிப்பு நிலையம், அயனாவரத்தில் ஐ.சி.எப்., எனப்படும் ஒருங்கிணைந்த ரயில் பெட்டி தொழிற்சாலை, கல்பாக்கம் அணுமின் நிலையம் உள்ளிட்டவை தமிழகத்திற்கு வர காரணமாக இருந்தார். எத்தியோப்பியாவுக்கான இந்திய துாதராகவும் இருந்தவர், தன், 80வது வயதில், 1992, ஜனவரி 3ல் மறைந்தார்.
இவரது பிறந்த தினம் இன்று!