
அக்டோபர் 20, 2014
திருச்சி மாவட்டம், முசிறியில், 1925ல், யக்ஞ நாராயணன் - மீனாட்சி தம்பதிக்கு மகளாக பிறந்தவர் ராஜம். இவருக்கு, 15 வயதிலேயே, மின் வாரிய பொறியாளராக இருந்த கிருஷ்ணன் என்பவருடன் திருமணம் ஆனது. கணவரின் உதவியால், பல புத்தகங்களை படித்து, பின், தானே கதைகளை எழுத ஆரம்பித்தார்.
கணவர் பல ஊர்களுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டதால், அவருடன் சென்ற இவர், அங்கு இருந்த மக்களுடன் பழகி, கள ஆய்வு செய்து, அரசியல், சமூகவியல் சார்ந்த நாவல்கள், கட்டுரைகளை எழுதினார். ஊட்டியில் பெரும்பான்மையாக வாழும் படுகர் இன மக்களின் வாழ்வியல், உடல் உழைப்பு மற்றும் உப்பள தொழிலாளர்களின் வலிகளை எழுதிய இவரது நாவல்கள் புகழ் பெற்றன.
இவர், 54 நாவல்கள், 15 சிறுகதை தொகுதிகள், 4 பெண்ணிய நுால்கள், 3 வாழ்க்கை வரலாறுகள், சுயசரிதை ஆகிய, 77 நுால்களை எழுதினார். இவை, அவரது காலத்திலேயே நாட்டுடைமை ஆக்கப்பட்டன.
'சோவியத்லாண்ட், நியூயார்க் ஹெரால்ட் ட்ரிப்யூன்' உள்ளிட்ட சர்வதேச விருதுகளுடன், 'சாகித்ய அகாடமி' விருதும் பெற்ற இவர், தன் உறவினர்களிடம் சொத்துகளை இழந்து, ஆதரவற்றோர் இல்லத்தில் வாழ்ந்து, தன், 89வது வயதில், 2014ல் இதே நாளில் மறைந்தார்.
பிரபல எழுத்தாளரின் நினைவு தினம் இன்று!