PUBLISHED ON : நவ 03, 2025 12:00 AM

நவம்பர் 3, 1911
சிவகங்கை மாவட்டம் கோட்டையூரில், அண்ணாமலை செட்டியாரின் மகனாக, 1911ல், இதே நாளில் பிறந்தவர் கருப்பன் செட்டியார் எனும் ஏ.கே.செட்டியார்.
திருவண்ணாமலையில் பள்ளி படிப்பு, ஜப்பானில் உள்ள, 'இம்பீரியல் ஆர்ட்ஸ்' கலைக் கழகம் மற்றும் நியூயார்க் புகைப்பட நிறுவனத்தில் புகைப்பட கலையை கற்றார். பல நாடுகளின் புகைப்பட கலைஞர்களிடம் இருந்து, காந்தியின் படச்சுருள்களை திரட்டி, மஹாத்மா காந்தியின் ஆவண படத்தை தயாரித்தார்.
கடந்த 1948ல், இப்படம் ஹிந்தியிலும், 1953ல், ஹாலிவுட்டில் ஆங்கிலத்திலும் வெளியிடப் பட்டது. கோகலே, நேரு உள்ளிட்டோருடன் காந்தியின் சந்திப்புகள் , தண்டி யாத்திரைக்கு பின் கடலில் காந்தி நீராடும் காட்சிகளுடன் இருந்த அப்படத்தை, வரலாற்று ஆய்வாளர் ஆ.ரா.வேங்கடாசலபதி, சென்னையில் திரையிட்டார்.
ஏ.கே.செட்டியார், வெளிநாடுகளுக்கு சென்ற தன் அனுபவங்களை, தமிழில் பயண கட்டுரைகளாக எழுதியதுடன், பல ஆய்வு கட்டுரைகளையும் எழுதினார். இவர், தன், 71வது வயதில், 1983, செப்டம்பர் 10ல் காலமானார்.
பயண கட்டுரை இலக்கியத்தின் முன்னோடி பிறந்த தினம் இன்று!

