ADDED : செப் 11, 2026 02:14 AM

செப்டம்பர் 11:
துாத்துக்குடி மாவட்டம், எட்டயபுரத்தில், சின்னசாமி அய்யர் -- லட்சுமி அம்மாள் தம்பதிக்கு மகனாக பிறந்தவர், சுப்பையா எனும் சுப்பிரமணியன்.
தன் 11வது வயதிலேயே கவிதை எழுதிய இவர், எட்டயபுரம் அரண்மனையில் பணியாற்றினார். இவரது கவி பாடும் திறமையை கண்டு வியந்த மன்னர், 'பாரதி' என பட்டம் சூட்டினார். பின், சுப்பிரமணிய பாரதி என அழைக்கப்பட்டார். சிறிது காலத்திலேயே அரண்மனையை விட்டு வெளியேறி காசிக்கு சென்றவர், தலைப்பாகை கட்டிக் கொண்டு, பல மொழிகளை கற்றார்.
பின், தமிழகம் திரும்பியவர் தமிழாசிரியராகவும், 'சுதேசமித்திரன், யங் இண்டியா, இந்தியா' உள்ளிட்ட இதழ்களிலும் பணியாற்றினார். ஆங்கிலம், வங்க மொழி இலக்கியங்களை தமிழில் மொழிபெயர்த்தார். தன் வசன கவிதை, கட்டுரைகளால் மண் விடுதலை; பெண் விடுதலை உணர்வுகளை ஊட்டினார்.
இயற்கையையும், காக்கை, குருவிகளையும் நேசித்தவர், தன் வறுமையையும் ரசித்தார். 'பாஞ்சாலி சபதம், கண்ணன் பாட்டு, குயில் பாட்டு' உள்ளிட்ட காவியங்களை எழுதி, 'மகாகவி'யான இவர், தன் 39வது வயதில், 1921ல், இதே நாளில் மறைந்தார்.
தற்போதும், பாலின பேதமின்றி தங்களின் செல்ல குழந்தைகளுக்கு பெற்றோர் சூட்டும் கம்பீர பெயருக்கு சொந்தக்காரர் மறைந்த தினம் இன்று!
