PUBLISHED ON : செப் 14, 2026 01:06 AM

செப்டம்பர் 14, 1990
உத்தர பிரதேச மாநிலத்தை பூர்வீகமாகக் கொண்ட, அசோக்குமார் யாதவ் - ஸ்வப்னா தம்பதியின் மகனாக, மஹாராஷ்டிரா மாநிலம், மும்பையில், 1990ல் இதே நாளில் பிறந்தவர், சூரியகுமார் யாதவ்.
மும்பையின், பிள்ளை கல்லுாரியில் பி.காம்., படித்த இவர், சிறு வயதிலேயே வெங்சர்க்கார் அகாடமியில் கிரிக்கெட் பயிற்சி பெற்றார். பார்சி ஜிம்கானா, பாரத் பெட்ரோலியம் உள்ளிட்ட உள்ளூர், 'கிளப்'களில் விளையாடினார்.
கடந்த 2010ல், மும்பை அணியின் லிஸ்ட் - ஏ, ரஞ்சி கோப்பை போட்டிகளில் களமிறங்கினார். ரஞ்சி சீசனில் 754 ரன்கள் குவித்ததுடன், 2011ல், சிறந்த இளம் வீரருக்கான எம்.ஏ.சிதம்பரம் விருது பெற்றார். 2021ல், இங்கிலாந்துக்கு எதிரான, 'டி 20' சர்வதேச கிரிக்கெட் போட்டியில் அறிமுகமான இவர், முதல் பந்திலேயே, 'சிக்சர்' அடித்தார்.
ஐ.சி.சி., தர வரிசையில் உலகின், 'நம்பர் 1 பேட்ஸ்மேனாக' நீண்டகாலம் இருந்தார். ரோஹித் சர்மாவுக்கு பின், 'டி 20' இந்திய அணியின் கேப்டன் ஆனார். ஐ.பி.எல்., கிரிக்கெட்டில் மும்பை அணியின் துாணாக விளங்கும் இவருக்கு, இன்று 36வது பிறந்த தினம்!
