ADDED : ஜூன் 01, 2025 02:51 AM
திருப்பூர்:திருப்பூர், ராக்கியாபாளையத்தில் ஆன்லைன் லாட்டரி விற்பனை நடப்பதாக போலீஸ் கமிஷனருக்கு தகவல் வந்தது. தனிப்படை போலீசார், ராக்கியாபாளையம், ஆர்.வி.இ., நகர், 2வது வீதியில் ஒரு வீட்டில் சோதனை செய்து விசாரித்தனர்.
அதில், ஜெகதீசன், 49, என்பவர், 'லோட்டஸ்' என்ற ஆப் வாயிலாக, ஐ.பி.எல்., கிரிக்கெட் சூதாட்டம் நடத்தி வந்தது தெரிந்தது. அவரை கைது செய்த போலீசார், நான்கு மொபைல் போன், லேப்டாப் பறிமுதல் செய்தனர். மேலும் சிலரை தேடி வருகின்றனர்.
போலீசார் கூறியதாவது:
ஜெகதீசன் கரூர் - பசுபதிபாளையத்தை சேர்ந்தவர். கிரிப்டோ கரன்சி, பங்கு சந்தை எலைட் கிளப் நடத்துகிறார். ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டிக்காக, 'லோட்டஸ்' என்ற ஆப்பை உருவாக்கி, சட்டவிரோதமாக சூதாட்டம் நடத்தி வந்தார்.
'ஜிபே' வாயிலாக மற்றும் நேரிடையாக பணத்தை இவரிடம் கொடுக்கின்றனர். பங்கேற்பவர், ஆரம்ப கட்டத்தில் வெற்றி பெறுவதை போல காண்பித்து, மீண்டும் பணத்தை கட்டும்போது, அவர்கள் தீர்மானிக்கும் நபர் வெற்றி பெறும் வகையில் உருவாக்கியுள்ளனர். இதில், லட்சக்கணக்கில் சூதாட்டம் நடந்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுகிறது. முதற்கட்டமாக, 20 லட்சம் ரூபாய்க்கு சூதாட்டம் நடந்துள்ளது தெரியவந்துள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.