'ஒரே நாடு; ஒரே தேர்தல்... என்ன நடக்குமோ தெரியவில்லை' : சபாநாயகர் அப்பாவு பேட்டி
'ஒரே நாடு; ஒரே தேர்தல்... என்ன நடக்குமோ தெரியவில்லை' : சபாநாயகர் அப்பாவு பேட்டி
ADDED : செப் 20, 2024 01:43 AM

திருநெல்வேலி: “ஒரே நாடு, ஒரே தேர்தல் நடைமுறைக்கு சாத்தியமாகுமா என தெரியவில்லை,” என சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.
திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் பகுதியில் மக்கள் குறைதீர் கூட்டத்தில் பங்கேற்ற அப்பாவு கூறியதாவது:
மக்களால் தேர்வு செய்யப்பட்ட மத்திய அரசு, 'ஒரே நாடு; ஒரே தேர்தல்' எனும் முடிவை எடுத்துள்ளது. லோக்சபா, ராஜ்யசபா மற்றும் அனைத்து மாநில சட்டசபைகளிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் தான், அதை நிறைவேற்ற முடியும். இது தான் அரசியல் அமைப்பு சட்டம் சொல்கிறது.
மத்திய அரசின் இந்தத் திட்டம், நடைமுறைக்கு ஒத்துவருமா என தெரியவில்லை. என்ன நடக்கப் போகிறது என்பதை யூகிக்க முடியவில்லை. பொறுத்திருந்து பார்ப்போம்.
இந்தியா போன்ற மிகப்பெரிய ஜனநாயக நாட்டில், ஒரே தேர்தல் என்பதை நினைக்கவே முடியவில்லை.
ஒருகட்டத் தேர்தல் என்பது தமிழகம், கேரளா உள்ளிட்ட தென் மாநிலங்களுக்கு வேண்டுமானால் சாத்தியமாகலாம். உத்திர பிரதேசம், குஜராத், வடகிழக்கு மாநிலங்களில் ஏழு, எட்டு கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. முதலில் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தும் அளவுக்கு மாநிலங்களை தயார் செய்ய வேண்டும்.
இவ்வாறு கூறினார்.
மாநில உரிமைகள் பறிப்பு
மாநிலங்களின் உரிமைகள், கடந்த 2017 முதல் படிப்படியாக பறிக்கப்பட்டு வருகின்றன. 2012ல் ஜி.எஸ்.டி., வரிவிதிப்பு வந்த பின், மாநிலங்களுக்கான வரி விதிக்கும் உரிமை பறிபோய், பிரிட்டிஷ் ஆட்சி காலம் போல மாறிவிட்டது. தற்போது, மத்திய அரசு புதிய கல்விக் கொள்கையை கொண்டு வந்து அதை விரும்பாத மாநிலங்களை அச்சுறுத்தும் வகையில் நிதி மறுக்கப்படுகிறது.
நீண்ட காலமாக உள்ள அனைவருக்கும் கல்வி திட்டத்தை நிறுத்தி, மிரட்டல் விடுகின்றனர். மத்திய அரசின் புதிய கல்வி கொள்கையில், 2035ல் தான் 50 சதவீதம் பேரை பட்டதாரி ஆக்குவோம் என்கின்றனர். ஆனால், தமிழகம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே அந்த இலக்கை கடந்து விட்டது. இந்தியாவில், தமிழக கல்விக் கொள்கைதான் முன்னோடியாக உள்ளது.
அப்பாவு, தமிழக சபாநாயகர்