ஒரே நாடு ஒரே தேர்தல் ஜனநாயகத்தை கொன்று விடும்; முதல்வர் ஸ்டாலின் கண்டனம்
ஒரே நாடு ஒரே தேர்தல் ஜனநாயகத்தை கொன்று விடும்; முதல்வர் ஸ்டாலின் கண்டனம்
ADDED : டிச 16, 2024 12:13 PM

சென்னை: 'ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் ஜனநாயகத்தைக் கொன்று விடும்' என முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து சமூகவலைதளத்தில் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் ஜனநாயகத்தைக் கொன்று விடும். நாட்டின் ஜனநாயகம், பன்முகத் தன்மையை ஒரே நாடு ஒரே தேர்தல் முறை அழித்துவிடும். ஒற்றை ஆட்சி முறைக்கு வழிவகுக்கும்.
அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது. அரசியலமைப்பு சட்டத்தை காக்க ஜனநாயக சக்திகள் ஒன்றிணைந்து போராட வேண்டும். தேர்தல் சீர்திருத்தம் என்ற போர்வையில் திணிக்கப்படும் பா.ஜ.,வின் முயற்சியை எதிர்க்க வேண்டும்.
மறைமுகத் திட்டத்துடன் அரசியல் சாசனத்தை சிதைக்கும் நோக்கத்துடன் பா.ஜ., அரசு செயல்படுத்த முனைகிறது. ஒரே நாடு, ஒரே தேர்தல் சர்வாதிகாரத்திற்கு வழி வகுக்கும். மாநிலங்கள் உரிமையை இழந்து பிராந்திய உணர்வுகள் அழிக்கப்படும்.
நாட்டின் முக்கிய பிரச்னைகளில் இருந்து மக்களை திசை திருப்பவே பா.ஜ., முயற்சி செய்கிறது. ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவை நிறைவேற்ற பா.ஜ.,விற்கு பெரும்பான்மை இல்லை. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.