ADDED : பிப் 03, 2024 04:20 AM

வாணியம்பாடி: ''தமிழகத்தில் மாசடைந்த ஆறு ஆறுகளில்இங்குள்ள பாலாறும் ஒன்று,'' என, தமிழகபா.ஜ., தலைவர் அண்ணாமலை பேசினார்.
திருப்பத்துார் மாவட்டம், வாணியம்பாடி சட்டசபை தொகுதியில் நேற்று, 'என் மண், என் மக்கள்' யாத்திரை நிகழ்ச்சியில், தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை பேசியதாவது:
வாணியம்பாடியில் அகத்தீஸ்வரர் கோவில் உள்ளது. இங்குள்ள காவலுார் விண்வெளி ஆராய்ச்சி மையம் சிறு, சிறு கோள்களை கண்டுபிடித்து ஆராய்ச்சிக்கு பெரும் பங்கு வகிக்கிறது.
சாலை வசதி
பிரதமர் கிராமப்புற சாலை திட்டத்திற்காக, தமிழகத்திற்கு ஒன்பது ஆண்டுகளில், 5,886 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. 100 சதவீதம் கிராமப்புற பகுதிகளில் சாலை அமைத்ததாக, மத்திய அரசிற்கு தமிழக அரசு அறிக்கை தெரிவித்துள்ளது. ஆனால், இங்குள்ள நெக்னா மலை கிராமத்திற்கு சாலை வசதி இல்லை.
கடந்த, 2018ல் நம்நாட்டில் அதிகளவில் மாசுபட்டுள்ள நதி குறித்து, மத்திய அரசு நடத்திய கணக்கெடுப்பில், தமிழகத்தில் ஆறு நதிகள் மிகவும் மோசமாக மாசடைந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.
அதில், இப்பகுதியில் ஓடும் பாலாறும் ஒன்று. இங்குள்ள தோல் தொழிற்சாலைகள், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க, மத்திய அரசு மானியம் வழங்க தயாராக இருந்தும், மாநில அரசின் மெத்தனத்தால், சுத்திகரிப்பு நிலையம் கட்டி கொடுக்க முடியாத நிலை உள்ளது. தோல் தொழிற்சாலை கழிவுநீரால் பாலாறு மாசுபட்டுள்ளது.
சுற்றுப்புற சூழல் பிரச்னை மிகுந்த இந்த பகுதிக்கு, சுற்றுச்சூழல் அமைச்சர் மெய்யநாதன் எத்தனை முறை வந்து, மக்கள் பிரச்னைகளை கேட்டுள்ளார். சுற்றுச்சூழல் பாதுகாப்பில், இந்தியாவில் உள்ள மாநிலங்களில், 21வது இடத்தில் தமிழகம் உள்ளது. சுத்தமான ஆற்று தண்ணீர் கிடைக்கக்கூடிய பட்டியலில் கடைசியிலிருந்து, 3வது இடத்தில் உள்ளது.
மூன்று மொழி பாடம்
கடந்த ஆட்சி காலத்தில் சிறுபான்மையினர், மத்திய அரசு வேலையில், 4.5 சதவீதம் பேர் இருந்தனர். தற்போது, 10.5 சதவீதம் பேர் உள்ளனர். இந்த தொகுதி, தி.மு.க., - எம்.பி., கதிர் ஆனந்த், கிங்ஸ்டன் என்ற சி.பி.எஸ்.இ., பள்ளியை நடத்துகிறார்.
அங்கு தமிழ், ஆங்கிலம், ஹிந்தி என மூன்று மொழி பாடம் உள்ளது. ஆனால், வெளியே போஸ்டர் ஒட்டுறாங்க, ஹிந்திக்கு எதிர் என்று.
இவ்வாறு அண்ணாமலை பேசினார்.

