தமிழகத்துக்கும், புதுச்சேரிக்கும் ஒரே தமிழ்த்தாய் வாழ்த்து: சொல்கிறார் சீமான்
தமிழகத்துக்கும், புதுச்சேரிக்கும் ஒரே தமிழ்த்தாய் வாழ்த்து: சொல்கிறார் சீமான்
UPDATED : அக் 21, 2024 02:44 PM
ADDED : அக் 21, 2024 02:12 PM

கரூர்: ''பாரதிதாசன் எழுதிய, புதுச்சேரி தமிழ்த்தாய் வாழ்த்து எவ்வளவு அழகாக இருக்கிறது. நான் ஆட்சிக்கு வந்தால் அதனை இரு மாநிலத்துக்கும் தமிழ்த்தாய் வாழ்த்தாக மாற்றுவேன்,'' என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.
கரூரில் நிருபர்கள் சந்திப்பில், சீமான் கூறியதாவது: இரண்டு முறை தோல்வி அடைந்த ஒருவர் மத்திய இணை அமைச்சர் ஆகும் போது, மண்ணின் மகன் திருமாவளவன் நாட்டின் முதல்வர் ஆக தகுதியில்லையா? அவர் ஆக கூடாதா என்ன? அந்த உணர்வு மற்றும் உரிமையில் நான் சொல்கிறேன்.
நாங்கள் வென்று வரும்போது நீங்கள் அதனை கேட்க வேண்டியதே இல்லை. தமிழர் கழகம் என்று இருந்தால், திராவிடர்கள் பதவியேற்க முடியாது என்பதால், திராவிட கழகம் என்று மாற்றினார்கள். இதனை யாரும் மறுப்பதற்கும் இல்லை, மறப்பதற்கும் இல்லை.
ஆரியம்போல் என்ற சொல்லை ஏன் நீக்கினார்கள் என்றால், அதுக்கு ஒரு விளக்கம் சொல்கிறார்கள் . ஆரியர்கள் மனது புண்படும் என்று சொல்கிறார்கள். திராவிடம் என்ற சொல் வந்தது காரணமாக தான் தமிழ்த்தாய் வாழ்த்தாக கருணாநிதி வைத்தார் என்று குற்றச்சாட்டு வைக்கிறேன்.
இல்லையென்றால் வந்து இருக்காது. பாரதிதாசன் எழுதிய, புதுச்சேரி வாழ்த்து எவ்வளவு அழகாக இருக்கிறது. நான் ஆட்சிக்கு வந்தால் அதனை தமிழ்த்தாய் வாழ்த்தாக மாற்றுவேன். தமிழ்நாட்டிலும், புதுச்சேரிலும் ஒரே பாட்டாக இருக்கட்டும். பாட்டு சிறப்பாக இருக்கிறது. இதை விட வேற என்ன வேணும். இவ்வாறு அவர் கூறினார்.