இணைய சூதாட்டத்தை ஊக்குவித்தால் ஒரு ஆண்டு சிறை: தமிழக அரசு எச்சரிக்கை
இணைய சூதாட்டத்தை ஊக்குவித்தால் ஒரு ஆண்டு சிறை: தமிழக அரசு எச்சரிக்கை
UPDATED : மே 02, 2024 05:34 PM
ADDED : மே 02, 2024 05:27 PM

சென்னை: இணையவழி சூதாட்டத்தில் ஈடுபடுவதை ஊக்குவிக்கும் அல்லது துாண்டும் நபர்கள், நிறுவனங்களுக்கு ஒரு ஆண்டு சிறைத்தண்டனை அல்லது 5 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இணைய வழி சூதாட்டத்தால், ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க தமிழக அரசு பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. அதன் விபரம் பின்வருமாறு: இணையவழி சூதாட்டம் மற்றும் பந்தயம் போன்றவற்றை விளம்பரப்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இணையவழி சூதாட்டங்கள் குறித்த விளம்பரங்கள் சட்டப்படி தடை செய்யப்பட்டுள்ளது.
இணையவழி சூதாட்டத்தில் ஈடுபடுவதை ஊக்குவிக்கும் அல்லது துாண்டும் நபர்கள், நிறுவனங்களுக்கு ஒரு ஆண்டு சிறைத்தண்டனை அல்லது 5 லட்சம் ரூபாய் வரை அபராதம் அல்லது ஆகிய இரண்டும் சேர்த்து விதிக்கப்படும். அதே குற்றத்தை மீண்டும் செய்தால் 1-3 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும்.
இணைய வழி சூதாட்டம் மற்றும் பந்தய நடவடிக்கைகள் பற்றிய தகவல்களைப் பகிர விரும்புவோர் அல்லது இணையவழி விளையாட்டுகளை ஒழுங்குபடுத்துவது குறித்த ஆலோசனைகளை வழங்க விரும்புவோர் அல்லது இது சம்பந்தமாக வேறு ஏதேனும் குறைகள் இருப்பின் www.tnonlinegamingauthority.com என்ற இணையதளத்தை தொடர்பு கொள்ளவும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

