காப்பீடு நிறுவன அதிகாரிக்கு ஓராண்டு சிறை தண்டனை ரத்து
காப்பீடு நிறுவன அதிகாரிக்கு ஓராண்டு சிறை தண்டனை ரத்து
ADDED : ஜூன் 26, 2025 12:30 AM
சென்னை:'அனுமதியின்றி எடுத்த விடுப்புக்கு நிர்வாகம் ஊதியம் வழங்கினால், அதற்கு தொழிலாளர் மீது மோசடி குற்றச்சாட்டு கூற முடியாது' என, தெளிவுபடுத்திய சென்னை உயர் நீதிமன்றம், காப்பீடு நிறுவன அதிகாரியின் ஓராண்டு சிறை தண்டனையை ரத்து செய்துள்ளது.
'நியூ இந்தியா அஷ்யூரன்ஸ்' நிறுவனத்தின் நாகப்பட்டினம் கிளை மேலாளராக பணியாற்றியவர் இளங்கோவன். இவர், 2006 முதல் 2008 வரை, 117 நாட்கள் விடுப்பு எடுத்து, சிங்கப்பூர், இலங்கை போன்ற நாடுகளுக்கு ஏழு முறை பயணம் செய்துள்ளார்.
முன் அனுமதி பெறாமல் விடுப்பு எடுத்ததுடன், ஒரு லட்சத்து 2,916 ரூபாய் ஊதியமாகப் பெற்று, நிறுவனத்துக்கு இழப்பு ஏற்படுத்தியதாக, சி.பி.ஐ., வழக்குப்பதிவு செய்தது.
இந்த வழக்கை விசாரித்த, சென்னை சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றம், இளங்கோவனுக்கு ஓராண்டு சிறை தண்டனையும், 2,000 ரூபாய் அபராதமும் விதித்து, கடந்த 2014ல் தீர்ப்பளித்தது.
இதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் இளங்கோவன் மேல்முறையீடு செய்தார்.
மனுவை விசாரித்த நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி பிறப்பித்த உத்தரவு:
மனுதாரர் இளங்கோவன், தான் வெளிநாடு செல்லும் முன் விடுப்பு கோரி விண்ணப்பித்து உள்ளார். அவ்வாறு இருக்கும்போது, அதை அனுமதியின்றி விடுப்பு எடுத்ததாக கருத முடியாது.
நிர்வாகம் ஊதியம் வழங்கினால், அதற்கு தொழிலாளர் மீது மோசடி குற்றச்சாட்டு கூற முடியாது. எனவே, இளங்கோவனுக்கு விதிக்கப்பட்ட தண்டனை ரத்து செய்யப்படுகிறது.
உயர் அதிகாரியின் அனுமதி இல்லாமல் வெளிநாடு பயணம் சென்றிருந்தால், அதற்கு ஒழுங்கு நடவடிக்கை எடுக்கலாம். அதை விடுத்து, மோசடி குற்றச்சாட்டு கூற முடியாது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.