தேசிய கூட்டுறவு நுகர்வோர் அமைப்பு வாயிலாக தமிழகத்தில் வெங்காயம் கிலோ ரூ.35க்கு விற்பனை
தேசிய கூட்டுறவு நுகர்வோர் அமைப்பு வாயிலாக தமிழகத்தில் வெங்காயம் கிலோ ரூ.35க்கு விற்பனை
ADDED : செப் 28, 2024 02:05 AM

சென்னை:தமிழகத்தில் பெரிய வெங்காயம் விலை கிலோ 70 ரூபாய்க்கு விற்கப்படும் நிலையில், மத்திய அரசின் தேசிய கூட்டுறவு நுகர்வோர் அமைப்பு வாயிலாக, கிலோ 35 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இதற்கு மக்களிடம் வரவேற்பு கிடைத்துள்ளது.
தமிழகத்தில் சைவ, அசைவ உணவு வகைகளில் பெரிய வெங்காயம் பயன்பாடு அதிகம்.
வரவேற்பு
அதேசமயம், திண்டுக்கல், திருநெல்வேலி உள்ளிட்ட சில மாவட்டங்களில் மட்டுமே பெரிய வெங்காயம் விளைகிறது. எனவே, தமிழகத்தின் பெரிய வெங்காய தேவை, பிற மாநிலங்கள் வாயிலாகவே பூர்த்தி செய்யப்படுகிறது.
அதன்படி, மஹாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா, ம.பி., உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து பெரிய வெங்காயம், தமிழகத்தில் உள்ள முக்கிய சந்தைகளுக்கு தினமும் லாரிகளில் எடுத்து வரப்படுகிறது. அங்கிருந்து மாநிலம் முழுதும் சில்லரை விற்பனைக்கு அனுப்பப்படுகிறது.
ஆந்திரா, மஹாராஷ்டிரா மாநிலங்களில் சமீபத்தில் பெய்த கனமழை காரணமாக, பெரிய வெங்காயம் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், வரத்து குறைந்துள்ளதால், தமிழகத்தில் கடந்த மாதம் கிலோ 35 ரூபாய் வரை விற்கப்பட்ட பெரிய வெங்காயம் தற்போது, 70 - 80 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
இதனால், ஏழை மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து, சென்னையில் கிலோ பெரிய வெங்காயம், 35 ரூபாய்க்கு விற்கப்படும் என மத்திய அரசு அறிவித்தது.
தற்போது, நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது வினியோக அமைச்சகத்தின் கீழ் உள்ள இந்திய தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு, சென்னையின் பல்வேறு இடங்களில் பெரிய வெங்காயம் கிலோ, 35 ரூபாய்க்கு விற்பனை செய்கிறது.
இந்த கூட்டமைப்பு, மக்கள் அதிகம் கூடும் இடங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள், மெட்ரோ ரயில் நிலையங்கள் அருகில் என, பல்வேறு இடங்களில் நடமாடும் வேன்கள் வாயிலாக வெங்காயம் விற்கிறது. இதற்கு மக்களிடம் வரவேற்பு காணப்படுகிறது.
கொள்முதல்
அதைத்தொடர்ந்து, வரும் நாட்களில் கோவை, திருப்பூர், மதுரை உள்ளிட்ட முக்கிய நகரங்களிலும் கிலோ, 35 ரூபாய்க்கு பெரிய வெங்காயம் விற்கப்பட உள்ளது.
தற்போது விற்பனை செய்யப்படும் பெரிய வெங்காயம், மஹாராஷ்டிரா, ம.பி., மாநிலங்களில், மே, ஜூலை மாதங்களில் கொள்முதல் செய்யப்பட்டது.