கட்டண வசூலுக்கு மட்டுமே 'ஆன்லைன்' வசதி பதிவுத்துறையில் சங்கங்கள் பதிவு பணி தாமதம்
கட்டண வசூலுக்கு மட்டுமே 'ஆன்லைன்' வசதி பதிவுத்துறையில் சங்கங்கள் பதிவு பணி தாமதம்
ADDED : அக் 30, 2025 11:15 PM
சென்னை:  தமிழகத்தில் பதிவுத்துறையின் பெரும்பாலான பணிகள், 'ஆன்லைன்' முறைக்கு மாற்றப்பட்டாலும், சங்கங்கள் பதிவு, புதுப்பிப்பு பணிகள், பழைய, 'மேனுவல்' முறையிலேயே உள்ளதால், அதிக தாமதம் ஏற்படுவதாக புகார் எழுந்து உள்ளது.
தமிழகத்தில் கல்வி, விளையாட்டு, கலை, சமூக மேம்பாடு போன்ற காரணங்களுக்காக சங்கங்கள் துவக்கப்படுகின்றன. இந்த சங்கங்கள் அனைத்தும், சட்டத்தின்படி பதிவு செய்யப்படுகின்றன. பதிவு செய்த சங்கங்கள், மாவட்ட பதிவாளர்கள் கண்காணிப்பில் உள்ளன.
ஆண்டுக்கு ஒருமுறை பொதுக்குழு கூட்டம் நடத்தி, வரவு - செலவு கணக்கு தாக்கல் செய்தது தொடர்பான விபரங்களை, மாவட்ட பதிவாளரிடம் சங்கங்கள் தாக்கல் செய்ய வேண்டும்.
நடவடிக்கை இதன் அடிப்படையில், சம்பந்தப்பட்ட சங்கங்களின் பதிவு புதுப்பிக்கப்படும். இதில், தொடர்ந்து சில ஆண்டுகள் ஆவணங்கள் தாக்கல் செய்யாத சங்கங்களின் பதிவு ரத்து செய்யப்படும்.
இந்நிலையில், பத்திரப்பதிவு உள்ளிட்ட பல்வேறு பணிகளை, 'ஆன்லைன்' முறைக்கு மாற்ற, பதிவுத்துறை நடவடிக்கை எடுத்தது. இதில், சங்கங்கள் பதிவு, புதுப்பித்தல் பணிகளும் ஆன்லைன் முறைக்கு மாற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
ஆனால், இதற்கான வசதிகள் முறையாக செய்யப்படவில்லை என, ஆவண எழுத்தர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
அவர்கள் கூறியதாவது:
தற்போதைய நிலவரப்படி, மாநிலம் முழுதும், 2.85 லட்சம் சங்கங்கள் பதிவாகி உள்ளன.
இவற்றின் பதிவு புதுப்பித்தலுக்கான ஆவணங்களை, ஆன்லைன் வாயிலாக பதிவேற்றம் செய்ய, மாவட்ட பதிவாளர்கள் அனுமதிப்பது இல்லை. கட்டணம் மட்டுமே ஆன்லைன் முறையில் வசூலிக்கப்படுகிறது.
அறிவுறுத்தல் ஆவணங்களை, 'மேனுவல்' முறையில் தாக்கல் செய்ய, மாவட்ட பதிவாளர்கள் அறிவுறுத்துகின்றனர். ஆனாலும், அவற்றை குறிப்பிட்ட காலத்தில் சரிபார்ப்பது இல்லை.
இதனால், தங்களுடைய சங்கத்தின் பதிவு புதுப்பிக்கப்பட்டு உள்ளதா என்பதை அறிய முடியாத நிலை உள்ளது.
இவ்வாறு கூறினர்.
மாவட்ட பதிவாளர் ஒருவர் கூறியதாவது:
சங்கங்களை பதிவு செய்வது, பதிவை புதுப்பிப்பது தொடர்பான பணிகளை, ஆன்லைன் முறையில் மேற்கொள்ளும் வசதி உள்ளது. ஆனால், இதில் சங்க நிர்வாகங்கள் ஆவணங்களை பதிவேற்றம் செய்ய அனுமதிப்பதில் சில பிரச்னைகள் ஏற்பட்டன.
அதனால், இந்த வசதி முழுமையாக பயன்பாட்டுக்கு வராமல் உள்ளது. விரைவில் இதை சரிசெய்ய நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

