ADDED : பிப் 18, 2024 05:29 AM
பெங்களூரு : சார் - பதிவாளர் அலுவலகத்திற்கு செல்லாமல், திருமணத்தை ஆன்லைனில் பதிவு செய்யும் திட்டம், கர்நாடகாவில் துவக்கப்பட்டு உள்ளது.
திருமணம் முடிந்த 90 முதல் 150 நாட்களில், புதுமண ஜோடி தங்களது திருமணத்தை, சார் -பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.
திருமணத்தை பதிவு செய்வதற்கு முன்பு, மணமகன், மணமகளின் புகைப்படங்கள், திருமண பத்திரிகை உட்பட பல ஆவணங்களை, சார் - பதிவாளர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
அந்த ஆவணங்களை சரிபார்த்து, ஒரு நாள் அலுவலகம் வரும்படி, தேதி குறித்து கொடுப்பர். அன்றைய தினம் சென்று, திருமணத்தை பதிவு செய்து வர வேண்டும். இதுதான் நடைமுறையில் இருந்து வந்தது.
திருமணத்தை பதிவு செய்தால் மட்டுமே, அரசின் சலுகைகளை பெற முடியும். இதனால் சார்பதிவாளர் அலுவலகத்தில், தினமும் கூட்டம் காணப்படும்.
கூட்டநெரிசலை குறைக்கும் வகையில், ஆன்லைனில் திருமணத்தை பதிவு செய்யும் திட்டத்தை, கர்நாடகா அரசு துவக்கி உள்ளது. திருமண அழைப்பிதழ், மணமகன், மணமகளின் புகைப்படங்கள், ஆதார், திருமணத்தின்போது எடுக்கப்பட்ட வீடியோ ஆகியவற்றை, ஆன்லைனில் பதிவு செய்தாலே போதும்.
அவற்றை சரிபார்த்து அதிகாரிகள் ஒப்புதல் அளித்த பின்னர், திருமண பதிவு சான்றிதழை ஆன்லைன் மூலமே, 'டவுன்லோட்' செய்து கொள்ளலாம்.
வெளிப்படைத் தன்மையுடன் அரசு சேவைகளை, அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லவே, இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டு இருப்பதாக, வருவாய் அமைச்சர் கிருஷ்ணபைரேகவுடா கூறி உள்ளார்.