நினைவு சின்னங்களில் படப்பிடிப்புக்கு ஆன்லைன் அனுமதி
நினைவு சின்னங்களில் படப்பிடிப்புக்கு ஆன்லைன் அனுமதி
ADDED : ஜூன் 16, 2026 06:39 AM
சென்னை; பாதுகாக்கப்பட்ட நினைவு சின்னங்களில், புகைப்படம் எடுப்பது, படப்பிடிப்பு நடத்துவது உள்ளிட்ட நிகழ்வுகளுக்கு, 'ஆன்லைன்' வழி யே அனுமதி பெறும் வசதியை, மத்திய தொல்லியல் துறை ஏற்படுத்தி உள்ளது.
மத்திய தொல்லியல் துறை, நாட்டில் உள்ள வரலாறு, கலை, பண்பாட்டு சிறப்பு மிக்க, நுாறாண்டுகளுக்கு முந்தைய பழமையான கோவில்கள், அரண்மனைகள், கோட்டைகள், கலையரங்கங்கள் உள்ளிட்டவற்றை, பாதுகாக்கப்பட்ட நினைவு சின்னங்களாக பராமரித்து வருகிறது.
அவற்றின் கலை, வரலாற்றுத்தன்மை பாதிக்காத வகையில், அவற்றை பாதுகாக்கப்பட்ட நினைவு சின்னங்களாக, பழைய நிலையிலேயே பாதுகாத்து, பராமரித்தும் வருகிறது.
அவற்றில் படம் எடுக்கவோ, படப்பிடிப்பு நடத்தவோ, 45 நாட்களுக்கு முன், விண்ணப்பித்து அனுமதி பெற வேண்டும் என்ற நடைமுறை இருந்தது.
தற்போது, அந்த நடைமுறை மாற்றப்பட்டு, 'https://sahmat.asi.gov.in/' என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது.
இதில், விண்ணப்பத்தின் நிலையை, விண்ணப்பதாரர்கள் அறியும் வசதியும் ஏற்படுத்தப் பட்டுள்ளது.
