உச்ச நீதிமன்ற தடையை மீறி ஆன்லைனில் பட்டாசு விற்பனை
உச்ச நீதிமன்ற தடையை மீறி ஆன்லைனில் பட்டாசு விற்பனை
ADDED : அக் 22, 2024 03:02 AM

சிவகாசி: ஆன்லைன் வாயிலாக பட்டாசு விற்பனை செய்வதற்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்தும், விற்பனை செய்யப்படுவதால் வியாபாரிகள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி, விருதுநகர், சாத்துார், வெம்பக்கோட்டை பகுதியில், 1,000த்திற்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் உள்ளன; 2,500க்கும் மேற்பட்ட பட்டாசு கடைகள் உள்ளன.
தமிழகம் முழுதும் தற்காலிக, நிரந்தர உரிமம் பெற்ற பட்டாசு கடைகள் உள்ளன. தீபாவளிக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், சிவகாசி பகுதியில் பட்டாசு வியாபாரம் களைகட்டி வருகிறது.
அந்தந்த ஊரில் பட்டாசு விற்கப்பட்டாலும், சிவகாசியில் வாங்கினால் விலை குறைவு என, நேரடியாக வாங்குவதற்கு பலர் விரும்புகின்றனர்.
இதற்காக ஒரு சிலர் ஆன்லைன் வாயிலாக, பட்டாசுக்கு ஆர்டர் கொடுக்கின்றனர். பட்டாசு உரிமையாளர்கள், வியாபாரிகள் யாரும் ஆன்லைன் வாயிலாக பட்டாசு விற்பனை செய்வதில்லை.
ஆனால், ஒரு சில புரோக்கர்கள் சிறிய அலுவலகம் அமைத்து, ஆன்லைன் மூலமாக பட்டாசு விற்பனை செய்கின்றனர். இதனால், கடைகளில் பட்டாசு வியாபாரம் பாதிக்கப்படுகிறது என வியாபாரிகள் குமுறுகின்றனர்.
புரோக்கர்களில் சிலர் ஆன்லைன் வாயிலாக பணம் பெற்று, வாடிக்கையாளர்களுக்கு பட்டாசு அனுப்பாமல் மோசடி செய்கின்றனர்.
இதனால், சிவகாசி மீது வெளி மாவட்ட மக்களுக்கு நம்பிக்கையும் குறைந்து விடுகிறது. எனவே, ஆன்லைன் வாயிலாக பட்டாசு விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, பட்டாசு வியாபாரிகள் எதிர்பார்க்கின்றனர்.