சூரியசக்தி மின் நிலையம் நிலம் வழங்க 12 பேர்தான் விருப்பம்
சூரியசக்தி மின் நிலையம் நிலம் வழங்க 12 பேர்தான் விருப்பம்
ADDED : ஜூலை 31, 2025 12:31 AM
சென்னை:தமிழகத்தில் மத்திய அரசின், 'பி.எம்.குசும்' திட்டத்தின் கீழ், தரிசு நிலத்தில் சூரியசக்தி மின் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன. இதற்கு, மின் வாரியத்திற்கு, 12 பேர் மட்டும் குத்தகைக்கு நிலம் வழங்க விருப்பம் தெரிவித்துள்ளனர்.
விவசாயிகளுக்கு பயிர் சாகுபடி மட்டுமின்றி, மின்சார விற்பனை வாயிலாகவும் வருவாய் கிடைக்க, 'பி.எம்.குசும் - பிரதமர் கிஸான் உர்ஜா சுரக் ஷா ஏவம் உத்தம் மஹாபியான்' திட்டத்தை, மத்திய அரசு செயல்படுத்தியுள்ளது.
இதற்காக, 11 கிலோ வோல்ட், 22 கி.வோ., மின் வழித்தடங்களை உடைய துணை மின் நிலையங்கள் உள்ள இடத்தில் இருந்து, 5 கி.மீ., சுற்றளவில் உள்ள தரிசு நிலம், விவசாயத்திற்கு பயன்படாத நிலம் வைத்திருப்பவர்களிடம், குத்தகைக்கு நிலம் வழங்குமாறு, மின் வாரியம் கடந்த மாதம் கேட்டது.
ஒவ்வொரு இடத்திலும் ஒரு மெகா வாட் முதல், நான்கு மெகா வாட் வரை மின் நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஒரு மெகா வாட்டிற்கு, மூன்று ஏக்கர் தேவை.
குத்தகைக்கு கிடைக்கும் இடத்தில் சூரியசக்தி மின் நிலையம் அமைக்க, ஒப்பந்த நிறுவனத்தை தேர்வு செய்து, மின் நிலையம் அமைக்கப்படும். நிலத்தின் உரிமையாளருக்கு குத்தகை தொகை வழங்கப்படும். மின் நிலையத்தை அமைக்கும் நிறுவனத்திடம் இருந்து மின்சாரத்தை, மின் வாரியம் வாங்கும்.
இதனால், நிறுவனத்துக்கு வருவாய் கிடைப்பதுடன், மின் வாரியத்துக்கும் குறைந்த விலையில் மின்சாரம் கிடைக்கும்.
இதுகுறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறுகையில், 'தற்போது, சூரியசக்தி மின் நிலையத்துக்கு நிலம் வழங்க, 12 பேர் விருப்பம் தெரிவித்துள்ளனர். ஒவ்வொரு நபரும் ஐந்து ஏக்கருக்கு குறைவாக நிலம் தர விருப்பம் தெரிவித்துள்ளனர். குத்தகை வருவாய் தொடர்பாக பேச்சு நடக்கிறது' என்றார்.