பா.ஜ., அணியில ஏ.சி.சண்முகமும், பாரிவேந்தரும் மட்டும் தான் பாக்கி இருப்பாங்க
பா.ஜ., அணியில ஏ.சி.சண்முகமும், பாரிவேந்தரும் மட்டும் தான் பாக்கி இருப்பாங்க
ADDED : ஜன 03, 2024 06:43 AM

புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி:
சேலம் மாவட்டம், காராமணி பகுதியைச் சேர்ந்த விவசாயிகளுக்கு அமலாக்கத்துறை அனுப்பியுள்ள சம்மனில் ஜாதி பெயரை குறிப்பிட்டுள்ளனர். ஜாதி பெயரை குறிப்பிட்டு கடிதம் அனுப்பிய அதிகாரிகள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய வேண்டும். விவசாயிகளுக்கு உரிய நியாயம் கிடைக்கவில்லை என்றால், நாங்கள் போராட வேண்டிய சூழல் ஏற்படும்.
டவுட் தனபாலு:
தமிழகத்துல, பா.ஜ.,வுக்கு ஆதரவான ஒரு சில கட்சிகளின் தலைவர்களில் டாக்டர் கிருஷ்ணசாமியும் ஒருத்தர்... அவரையும், 'டென்ஷன்' ஆக்குனா, பா.ஜ., அணியில ஏ.சி.சண்முகமும், பாரிவேந்தரும் மட்டும் தான் பாக்கி இருப்பாங்க என்பதில், 'டவுட்'டே இல்லை!
---
பத்திரிகை செய்தி:
அதிக கடன் வாங்கிய மாநிலங்களில், முதலிடத்தில் உள்ள தமிழகம், அடுத்த மூன்று மாதங்களில், கடன் பத்திரங்கள் வழியாக, 37,000 கோடி ரூபாய் கடன் பெற திட்டமிட்டுள்ளது.
டவுட் தனபாலு:
முதல்வர் அடிக்கடி, 'தமிழகத்தை நம்பர்1 மாநிலமாக்குவேன்'னு சொல்றாரு... இந்த அரசு போகிற வேகத்தை பார்த்தால், கடன் வாங்குறதுல தான், நாம நம்பர் 1 இடத்துக்கு வருவோம் என்பது, 'டவுட்'டே இல்லாம தெரியுது!
---
பத்திரிகை செய்தி:
வரும் 2025க்குள் காசநோயை முற்றிலும் ஒழிக்க, இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. மத்திய அரசு அறிக்கையின்படி, நாடு முழுதும், 25 லட்சம் பேருக்கு காசநோய் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. தமிழகத்தில், 2023ல், 96,709 பேர் காசநோய்க்கு சிகிச்சை பெற்றுள்ளனர். அதற்கு முந்தைய 2022ல், 94,171 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், 2023ல், 2.65 சதவீதம் பாதிப்பு அதிகரித்துள்ளது.
டவுட் தனபாலு:
இன்னும் ஒரே வருஷத்துல, காசநோயை முற்றிலும் ஒழிக்க இலக்கு நிர்ணயிச்சா, வருஷா வருஷம் பாதிப்பு எண்ணிக்கை குறைய தானே செய்யணும்... இப்படி, ஒரு லட்சத்தை எட்டும் அளவில் பாதிப்பு தொடர்ந்தா, 2025 அல்ல 2050 ஆனாலும், காசநோயை முற்றிலும் ஒழிக்க முடியுமா என்பது, 'டவுட்' தான்!