இறைவழிபாட்டால் மட்டுமே இந்திரியங்களுக்கு முழு பயன்! சிருங்கேரி ஜகத்குரு அருளுரை
இறைவழிபாட்டால் மட்டுமே இந்திரியங்களுக்கு முழு பயன்! சிருங்கேரி ஜகத்குரு அருளுரை
ADDED : நவ 27, 2025 02:19 AM

புதுடில்லியில் விஜய யாத்திரை மேற்கொண்டுள்ள சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீட ஜகத்குரு ஸ்ரீ விதுசேகர பாரதீ சுவாமி, மலை மந்திர் கோவிலில் நேற்று தரிசனம் செய்தார். சுவாமிக்கு பாரம்பரிய முறையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
கோவிலில், தங்க ரத பவனியை துவக்கி வைத்த ஜகத்குரு, ஆந்திரா அசோசியேஷன் அரங்கத்துக்கு விஜயம் செய்து, பக்தர்களுக்கு வழங்கிய அருளுரை:
ஸ்ரீசுப்ரமணிய புஜங்கத்தில் உள்ள ஸ்லோகத்தில், 'நம் கண்கள் கடவுளைப் பார்க்க மட்டுமே. காதுகள் கடவுளைப் பற்றி கேட்க மட்டுமே. நம் நாக்கு கடவுளைப் பற்றி உச்சரிக்க மட்டுமே. நம் கைகள் கடவுளுக்கு சேவை செய்ய மட்டுமே' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இறைவழிபாட்டால் மட்டுமே இந்திரியங்கள் முழு பயன்களை பெறுகின்றன. இதை செய்பவர்கள், உயர்ந்த ஆன்மிக இலக்குகளை எளிதாக அடைவர்.
ஆந்திரா என்ற ஒரு பிராந்தியத்தை பிரதிநிதித்துவப்படுத்தி அமைக்கப்பட்ட ஒரு சங்கம், சமஸ்கிருதியையும், தாய்மொழியையும் பாதுகாக்கும் இரட்டை இலக்குகளை அடைய பாடுபட வேண்டும்.
மற்ற பிராந்தியங்களில் இருந்து, ஆந்திரா மட்டும் விதிவிலக்காக இருந்தது. மற்ற பகுதிகளில் ஆதி சங்கராச்சாரியார், மக்களை தன் வழிக்கு கொண்டு வர, விவாதங்களில் ஈடுபட வேண்டி இருந்தது. ஆந்திராவைப் பொறுத்தவரை, மக்கள் இயல்பாகவே அவர் வசம் வந்து சேர்ந்தனர்.
சங்கராச்சாரியாரின் வழிகாட்டுதல் எந்தவொரு பிரிவையும் சாராதது; உலகளாவியது என்பதை அனைவரும் உணர வேண்டும்.
இவ்வாறு சுவாமி பேசினார்.
- நமது நிருபர் -

