அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா... ரூ.11 லட்சம் லஞ்சப்பணத்துடன் சிக்கிய அதிகாரிக்கு உடனடி போஸ்டிங்!
அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா... ரூ.11 லட்சம் லஞ்சப்பணத்துடன் சிக்கிய அதிகாரிக்கு உடனடி போஸ்டிங்!
ADDED : நவ 27, 2024 02:26 PM

ஊட்டி: ஊட்டியில் நவ.,9ம் தேதி லஞ்சப்பணம் 11.70 லட்சம் ரூபாயுடன், லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் கையும் களவுமாக பிடிபட்ட கமிஷனர் ஜஹாங்கீர் பாஷாவை, திருநெல்வேலி மாநகராட்சி உதவி கமிஷனராக நியமித்து அரசு உத்தரவிட்டுள்ளது.
ஊட்டி நகராட்சி கமிஷனராக இருந்தவர் ஜஹாங்கீர் பாஷா. இவர், நவ.,9ம் தேதி லஞ்சப்பணத்துடன் செல்வதாக, லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி அவர் செல்லும் வழியை கண்காணித்த போலீஸ் படையினர், யார் யாரிடம் என்ன வாங்குகிறார் என்பதை கண்டறிந்தனர்.
கடைசியில், காரில் ஏறி அவர் செல்ல முயன்றபோது வழிமறித்து பிடித்தனர். போலீஸ் சோதனையில், அவரிடம் 11 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் பிடிபட்டது. அந்தப்பணத்துக்கு அவரால் எந்தக் கணக்கும் சொல்ல முடியவில்லை.
லஞ்சப்பணம் என்பதை உறுதி செய்த போலீசார், யார் யாரிடம் அந்தப்பணம் வசூலிக்கப்பட்டது என்பதை விசாரித்தனர். இதில், வாகன நிறுத்துமிடத்தை ஒப்பந்தம் செய்த ஒப்பந்ததாரர், துணிக்கடையை ஹோட்டலாக மாற்ற விண்ணப்பித்த சாகுல் ஹமீது ஆகியோர் கொடுத்த லஞ்சப்பணம் என்பது தெரிய வந்தது.
லஞ்சப்பணத்துடன் கையும், களவுமாக சிக்கிய அவர் மீது வழக்கு கடந்த 10ம் தேதி பதியப்பட்டது. இதையடுத்து, உடனடியாக காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டார். இந்நிலையில், தற்போது அவர் திருநெல்வேலி மாநகராட்சி உதவி கமிஷனராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.
கணக்கில் வராத பணத்துடன், லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் சிக்கிய ஒரு அதிகாரி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ள நிலையில் அவருக்கு புதிய பணியிடம் ஒதுக்கப்பட்டது எவ்வாறு என்ற கேள்வி எழுந்துள்ளது.
மேலும் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டு 3 வாரங்களுக்குள் எப்படி அவர், வேறு ஒரு புதிய பணியிடத்துக்கு நியமனம் செய்யப்பட்டார்; அவர் மீதான துறை விசாரணை நடத்தப்பட்டதா, அவருக்கு உதவி செய்தது யார் என்பது போன்ற அடுக்கடுக்கான கேள்விகள் எழுகின்றன.
இது பற்றிய தகவல் வெளியானதும், பல்வேறு தரப்பிலும் அரசு மீது கடுமையாக விமர்சனங்கள் எழத் தொடங்கியுள்ளன. 'இது, எந்தக் கொம்பனாலும் குறை சொல்ல முடியாத ஆட்சி' என்று ஆளும் கட்சியினர் அடிக்கடி கூறிக் கொள்வது வழக்கம். அதைக்குறிப்பிட்டு, நெட்டிசன்கள், அரசை விமர்சித்து வருகின்றனர்.

