ஊட்டிக்கு அன்னுார் வழியாக நான்கு வழிச்சாலை: ஒரு வாரத்தில் 'டெண்டர்'
ஊட்டிக்கு அன்னுார் வழியாக நான்கு வழிச்சாலை: ஒரு வாரத்தில் 'டெண்டர்'
ADDED : நவ 05, 2024 04:19 AM

கோவை : ''அவிநாசி-மேட்டுப்பாளையம் வரையிலான, 35 கி.மீ., துார நான்கு வழிச்சாலை அமைக்க ஒரு வாரத்தில் 'டெண்டர்' விடப்படும்,'' என, தமிழக நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் வேலு கூறினார்.
கோவை-அவிநாசி ரோட்டில் மேம்பால பணிகள், மேற்குப்புறவழிச்சாலை உள்ளிட்ட இடங்களை, தமிழக நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் வேலு நேற்று ஆய்வு செய்தார். அதன்பின், அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
கோவை மாவட்டத்தில், மூன்றாண்டுகளில், 664 கி.மீ., சாலைகளை மேம்படுத்த ரூ.997 கோடி ஒதுக்கப்பட்டது. அதில், 652 கி.மீ., துாரசாலை செப்பனிடப்பட்டு, மீதப்பணிகள் நடந்து வருகின்றன. நடப்பு, 2024-25ம் நிதியாண்டில், 148 கி.மீ., சாலைகளை மேம்படுத்த டெண்டர் விடப்பட்டு,ரூ.332 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
மொத்தம், 32 கி.மீ., துாரமுள்ள மேற்குப்புறவழிச்சாலை பணிகள் மூன்று கட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. முதல்கட்டமான, 12 கி.மீ., துாரத்துக்கு ரூ.250 கோடி ஒதுக்கப்பட்டு அடுத்தாண்டு ஆக., மாதத்துக்குள் முடிக்கப்படும். இரண்டாம் கட்டமான, 12 கி.மீ.,பணிக்கு, 95 சதவீத நில எடுப்பு முடிந்துவிட்டது. விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு நிதித்துறைக்கு அனுப்பப்பட்டுள்ளது. மூன்றாம் கட்டமான, 8 கி.மீ.,க்கு நில எடுப்புபணி நடக்கிறது.
அவிநாசி-கோவை சாலையில், ரூ.1,791 கோடி மதிப்பீட்டில் அடுத்தாண்டு ஜன., மாதத்துக்குள் முடிக்கும் வகையில் மேம்பால பணி நடக்கிறது.
தேசிய நெடுஞ்சாலை துறை மூலமாக மூன்று பாலப்பணிகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. பொதுமக்களில் ஒருதரப்பினர் 'மெட்ரோ' ரயில் தேவை என்றும், ஒரு தரப்பினர் மூன்று பாலங்கள் வேண்டும் என்று கூறினர். கலெக்டர் தலைமையில் மக்களிடம் கருத்துகள் கேட்கப்பட்டு,மூன்று பாலங்கள் தேவை என பரிந்துரைக்கப்பட்டது. நிறுத்தி வைக்கப்பட்ட பாலப்பணிகளை துவங்க, மத்திய அமைச்சர் நிதின் கட்கரியை சந்தித்து அனுமதி பெறப்பட்டது. அதில் ஒன்று சாய்பாபா காலனி பாலம் ரூ.72 கோடி மதிப்பீட்டில் நடந்து வருகிறது. சரவணம்பட்டி, சிங்காநல்லுாரிலும்பாலம்அமைகிறது. சிங்காநல்லுார் பணிக்கு ஒப்பந்ததாரர்முறையாக வராததால், மீண்டும் டெண்டர் கோரப்பட்டுள்ளது.
பொதுவாக கோவை வழியாக மேட்டுப்பாளையம் அடைந்து, அங்கிருந்து ஊட்டி செல்கின்றனர்.
இதனால் ஏற்படும் நெரிசலை தவிர்க்க, அவிநாசி-அன்னுார்-மேட்டுப்பாளையம் வரையிலான, 35 கி.மீ., துாரம் நான்கு வழிச்சாலை அமைக்க, ரூ.250 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இன்னும் ஒரு வாரத்தில் 'டெண்டர்' விடப்படும்.
இவ்வாறு, அவர் கூறினார்.