அகரத்தில் திறந்த வெளி அருங்காட்சியம் ரூ. 50 லட்சம் அரசு நிதி விரயம்: தொல்லியல் துறை மீது புகார்
அகரத்தில் திறந்த வெளி அருங்காட்சியம் ரூ. 50 லட்சம் அரசு நிதி விரயம்: தொல்லியல் துறை மீது புகார்
ADDED : ஜன 09, 2024 02:53 AM

கீழடி: கீழடி அருகே அகரத்தில் தொல்லியல் துறை பரிந்துரையின் பேரில் அமைக்கப்பட்ட திறந்த வெளி அருங்காட்சியகம் பயன்பாடு இன்றி கிடப்பதால் அரசின் நிதி வீணாகி வருகிறது.
தமிழக தொல்லியல் துறை சார்பில் கீழடி, அகரம், கொந்தகை, மணலுார் ஆகிய தளங்களில் அகழாய்வு பணிகள் நடந்தன. இதில் மணலுாரில் இரு கட்ட அகழாய்வுடன் பணிகள் நிறுத்தப்பட்டு விட்டன. அகரத்தில் 2022ல் பணிகள் நிறுத்தப்பட்டன. அகரம் தளத்தில் உறைகிணறுகள், கெண்டி மூக்கு பானை. தங்க காதணி , சுடுமண் அச்சு உள்ளிட்ட பொருட்கள் கண்டறியப்பட்டன.
கீழடி, அகரம், கொந்தகை ஆகிய தளங்கள் 2022 முதல் திறந்த வெளி அருங்காட்சியகமாக மாற்றப்பட்டன. இதில் அகரம், கொந்தகை ஆகிய தளங்களில் தலா 120 அடி நீளம், 95 அடி அகலம், ஏழ அடி உயரத்தில் தகர ஷெட் அமைக்கப்பட்டு அகழாய்வு குழிகள் பாதுகாக்கப்பட்டன. கொந்தகை, கீழடியில் தொடர்ந்து அகழாய்வு நடைபெறுகின்றன. அகரத்தில் பணிகள் நிறைவு பெற்று விட்டன. அகரத்தில் இனி அகழாய்வு நடத்த வாய்ப்பில்லை என்றும் 10 அடிக்கும் கீழே ஆற்று மணல் தென்பட்டு விட்டதால் அகழாய்வு பணிகளால் எந்த வித பயனும் இல்லை எனவும் தொல்லியல் துறை தெரிவித்துவிட்டது.
அகழாய்வு தொடர்ந்து நடைபெறாததால் அப்பகுதிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல வாய்ப்பில்லை. இதுகுறித்த முழு தகவலும் தொல்லியல் துறை அதிகாரிகளுக்கு தெரிந்திருந்தும் அகரத்தில் திறந்த வெளி அருங்காட்சியகத்திற்கு பரிந்துரை செய்து கட்டி முடிக்கப்பட்டுள்ளது. திறந்த வெளி அருங்காட்சியகத்திற்கு ஊழியர்கள் நியமிக்கப்படாததால் அகழாய்வு நடந்த குழிகள் அனைத்திலும் மண் சரிந்து மூடிவிட்டது.
குழிகளில் தண்ணீர் நிரம்பியதுடன் சுடுமண் பானைகள் உள்ளிட்டவைகள் மேல் சகதி விழுந்து பல பானைகள் மண்ணுக்குள் சென்று விட்டன. திறந்த வெளி அருங்காட்சியக ஷெட்டிற்கு 50 லட்ச ரூபாய் வரை செலவிடப்பட்டுள்ளது.
பார்வையாளர்கள் வராததால் ஷெட்கள் ஆடு, மாடு கட்டும் இடமாக மாறி விட்டது. பாதுகாப்பாக இருந்த உறைகிணறுகளும் சேதமடைந்து வருகின்றன. எனவே தமிழக அரசு திறந்த வெளி அருங்காட்சியகத்தை பராமரித்து சுற்றுலா பயணிகள் சென்று வர வாகன வசதி செய்து தர வேண்டும், அல்லது திறந்த வெளி அருங்காட்சியகம் திட்டத்தை கை விட வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.