ADDED : ஆக 17, 2011 12:37 AM

சென்னை : நெடுஞ்சாலைத் துறையால், 41 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட, 12 புதிய பாலங்களை, வீடியோ கான்பரன்சிங் மூலம், முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார்.
சென்னை ஈ.வெ.ரா.பெரியார் சாலை - அமைந்தகரை கூவம் ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள பழைய பாலப் பகுதியில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், சென்னை பெருநகர வளர்ச்சித் திட்டப் பணிகளின் கீழ், 6 கோடியே, 90 லட்ச ரூபாய் செலவில் கூடுதலாக கட்டப்பட்ட புதிய பாலம், வேலூர் மாவட்டம், பாணாவரம் ரயில்வே கிராசிங்கில், 11 கோடி ரூபாய் மதிப்பிலான சாலை மேம்பாலத்தை, தலைமைச் செயலகத்தில் இருந்தவாறு, வீடியோ கான்பரன்சிங் மூலம், முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார்.
திருவாரூர் மாவட்டம், கோரையாறு குறுக்கே, 2.71 கோடி ரூபாய் மதிப்பிலான உயர்மட்ட பாலம், நாகை மாவட்டம், திருமருகல் என்ற இடத்தில் முடிகொண்டன் ஆற்றின் குறுக்கே, 2.16 கோடி மதிப்பில் உயர்மட்டப் பாலத்தையும் முதல்வர் திறந்து வைத்தார். நிகழ்ச்சியின் போது, நெடுஞ்சாலைத் துறை அமைச்சர், சுற்றுலாத் துறை அமைச்சர் கோகுல இந்திரா, தலைமைச் செயலர், நெடுஞ்சாலைத் துறைச் செயலர் உடனிருந்தனர்.