ஒரே நாடு; ஒரே தேர்தல் குறித்து கருத்து: தமிழக அரசுக்கு பார்லி., குழு கடிதம்
ஒரே நாடு; ஒரே தேர்தல் குறித்து கருத்து: தமிழக அரசுக்கு பார்லி., குழு கடிதம்
ADDED : ஜன 15, 2026 03:45 AM

சென்னை: 'ஒரே நாடு; ஒரே தேர்தல்' குறித்து கருத்து தெரிவிக்கும்படி, பார்லிமென்ட் கூட்டு குழு, தமிழக அரசுக்கு கடிதம் அனுப்பி உள்ளது.
நாடு முழுதும், லோக்சபா தேர்தல் ஒரே நேரத்தில் நடந்தாலும், சட்டசபை, உள்ளாட்சி தேர்தல், தனித்தனியாக வெவ்வேறு ஆண்டுகளில் நடக்கிறது.
இதனால், தேவையற்ற செலவுகள் ஏற்படுவதுடன், அரசு ஊழியர்கள், பாதுகாப்பு படையினருக்கு பணிச்சுமை ஏற்படுகிறது. இதையடுத்து, நாடு முழுதும் ஒரே நேரத்தில், லோக்சபா தேர்தல், சட்டசபை தேர்தல்களை நடத்த, மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.
இந்த தேர்தல் முடிந்த 100 நாட்களில், உள்ளாட்சி தேர்தலை நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்கு பல்வேறு மாநிலங்களில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
'ஒரே நாடு; ஒரே தேர்தல்' என்பது, கூட்டாட்சி தத்துவத்தை சிதைத்துவிடும் என, தமிழக முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்து இருந்தார். இந்த சட்ட மசோதாவிற்கு, மத்திய அமைச்சரவை ஏற்கனவே ஒப்புதல் வழங்கி உள்ளது.
பார்லிமென்டிலும் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவை திரும்பப் பெற எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியதை தொடர்ந்து, இதை ஆய்வு செய்ய, பார்லிமென்ட் கூட்டு குழு அமைக்கப்பட்டு உள்ளது.
இக்குழுவில், 39 எம்.பி.,க்கள் உள்ளனர். இக்குழுவினர், கடந்த 8ம் தேதி கூடி ஆலோசனை நடத்தினர். இதையடுத்து, மாநிலங்களின் கருத்துகளை பெற முடிவு செய்யப்பட்டது.
அதன்படி ஒரே நாடு; ஒரே தேர்தல் தொடர்பாக, கருத்து தெரிவிக்க, தமிழக அரசுக்கு, பார்லிமென்ட் கூட்டு குழு வாயிலாக கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

