20 சீட்டு, 200 கோடி என்று பேரம் பேசும் எதிர்க்கட்சி கூட்டணி: உதயநிதி விமர்சனம்
20 சீட்டு, 200 கோடி என்று பேரம் பேசும் எதிர்க்கட்சி கூட்டணி: உதயநிதி விமர்சனம்
ADDED : நவ 24, 2024 02:17 PM

சென்னை: 'அ.தி.மு.க.,வை சேர்ந்த திண்டுக்கல் சீனிவாசன் நாங்கள் கூட்டணிக்கு அழைத்தால் 20 சீட்டு அல்லது ரூ.200 கோடி கேட்கிறார்கள் என்று சொல்கிறார். பேரம் பேசக்கூடிய கூட்டணி எதிர்க்கட்சி கூட்டணி,' என துணை முதல்வர் உதயநிதி விமர்சனம் செய்துள்ளார்.
நாகையில் தி.மு.க.,நிர்வாகி திருமண விழாவில் உதயநிதி பேசியதாவது: இந்தியாவே திரும்பி பார்க்கும் வகையிலான மகளிர் உரிமை தொகை திட்டம் மூலம் மாதம் 1 கோடியே 16 லட்சம் மகளிர் பயன் அடைகின்றனர். இதனை பல்வேறு மாநிலங்கள் பின்பற்றி வருகின்றன. இதனால் எதிர்க்கட்சி தலைவராக உள்ள பழனிசாமிக்கு அதிகமான வயிற்றெரிச்சல். காலம் முழுவதும் தமிழகத்திற்கு உழைத்த கருணாநிதி பெயரை எல்லா திட்டத்திற்கும் ஏன் வைக்கிறீர்கள் என்று அவருக்கு வயிற்றெரிச்சல்.
வெற்றி கூட்டணி
எப்படியாவது நம்ம கூட்டணி உடையாதா விரிசல் விழுந்து விடாதா என்று காத்து கிடக்கிறார். இந்த முறையும் மக்கள் ஏற்றுக்கொள்ளும் வெற்றிக்கூட்டணியை முதல்வர் ஸ்டாலின் அமைப்பார். வெற்றி கூட்டணியை நோக்கி நாம் தொடர்ந்து சென்று கொண்டு இருக்கிறோம். ஆனால் எதிர்க்கட்சியின் நிலைமையை யோசித்து பாருங்கள். மூன்று நாட்களுக்கு முன், அ.தி.மு.க.,வை சேர்ந்த திண்டுக்கல் சீனிவாசன் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.
200 தொகுதிகள்
நாங்கள் கூட்டணிக்கு அழைத்தால் 20 சீட்டு அல்லது ரூ.200 கோடி கேட்கிறார்கள் என்று சொல்கிறார். பேரம் பேசக்கூடிய கூட்டணி எதிர்க்கட்சி கூட்டணி. நம் கூட்டணி கொள்கை கூட்டணி; வெற்றி கூட்டணி.தமிழக மக்கள் ஏற்றுக் கொள்ளும் வகையிலான வெற்றிக் கூட்டணியை அமைத்து, சட்டசபை தேர்தலில் 234 தொகுதிகளில் 200 தொகுதிகளை வென்று காமிக்கும். இவ்வாறு உதயநிதி பேசினார்.