மின் குறைதீர் மன்ற தலைவர் நியமன முறைக்கு எதிர்ப்பு
மின் குறைதீர் மன்ற தலைவர் நியமன முறைக்கு எதிர்ப்பு
ADDED : ஜன 20, 2024 12:36 AM
சென்னை:மின் குறைதீர் மன்ற தலைவராக, மின் வினியோக பணியில் ஈடுபடாத பொறியாளரை நியமிக்குமாறு மின் வாரியத்திற்கு கோரிக்கை விடப்பட்டுள்ளது.
தமிழக மின் வாரியத்தில் உள்ள, 44 மின் பகிர்மான வட்டங்களுக்கும், தலா ஒரு குறைதீர் மன்றம் உள்ளது. அதன் தலைவராக மேற்பார்வை பொறியாளர் உள்ளார்.
புதிய மின் இணைப்பு வழங்க தாமதம், தவறாக மின் பயன்பாடு கணக்கெடுப்பு உள்ளிட்ட சேவைகளால் பாதிக்கப்படுவோர், குறைதீர் மன்றத்தில் புகார் அளிக்கலாம். ஆனால், நடவடிக்கை எடுக்காமல், சமரசம் செய்யும் முயற்சியில் ஈடுபடுவதாக புகார்கள் எழுந்துள்ளன.
இதுகுறித்து, தமிழகமுற்போக்கு நுகர்வோர் மைய தலைவர் டி.சடகோபன் கூறியதாவது:
மாவட்ட குறைதீர் மன்ற தலைவர்களாக, மேற்பார்வை பொறியாளர்கள் உள்ளனர். மன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யும் போது, அதை பரீசிலிக்கும்மின் குறை தீர்ப்பாளரும்,மின் வாரியத்தின் முன்னாள் தலைமை பொறியாளர். அவர்கள், மின் வாரிய பொறியாளர்களை காப்பாற்றவே முயற்சிக்கின்றனர்.
எப்படி பாதிக்கப்பட்ட நபருக்கு நியாயமான தீர்வு கிடைக்கும்; எனவே, குறைதீர் மன்றங்களுக்கு, மின் வினியோக பணியில் ஈடுபடாத பொறியாளரை நியமிக்க, ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.