மியூசிக் அகாடமிக்கு எதிர்ப்பு: விருதை திருப்பி அளித்தார் சித்ரவீணை ரவிக்கிரண்!
மியூசிக் அகாடமிக்கு எதிர்ப்பு: விருதை திருப்பி அளித்தார் சித்ரவீணை ரவிக்கிரண்!
UPDATED : நவ 26, 2024 11:50 AM
ADDED : நவ 24, 2024 07:38 PM

சென்னை: மியூசிக் அகாடமிக்கு எதிர்ப்பு தெரிவித்து, பிரபல கர்நாடக இசைக்கலைஞர் சித்ரவீணை ரவிக்கிரண், எம்எஸ் சுப்புலட்சுமி பெயரிலான விருதையும், அதனுடன் தனக்கு வழங்கப்பட்ட ரூ.1 லட்சம் பரிசுத்தொகையை திருப்பி அளிப்பதாக தெரிவித்துள்ளார். பரிசுத்தொகையுடன் கூடுதலாக 10 ஆயிரம் ரூபாயை சேர்த்து அளிப்பதாகவும் கூறியுள்ளார்.
பாடகர் டி.எம்.கிருஷ்ணாவுக்கு சென்னை மியூசிக் அகாடமி இந்தாண்டுக்கான சங்கீத கலாநிதி விருதை அறிவித்தது. இந்த விருதுடன் எம்.எஸ். சுப்புலட்சுமி பெயரிலான விருது, ரூ.1 லட்சம் பரிசுத்தொகையும் வழங்கப்பட இருந்தது. இந்த முடிவுக்கு கர்நாடக இசை கலைஞர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். எம்.எஸ். சுப்புலட்சுமியை மிக மோசமாக விமர்சித்தவருக்கு எப்படி அவரது பெயரில் விருது வழங்கலாம் என கேள்வி எழுப்பினர்.இந்நிலையில், மியூசிக் அகாடமியின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, பிரபல கர்நாடக இசைக்கலைஞரான சித்ரவீணை ரவிக்கிரண், தனக்கு வழங்கப்பட்ட சங்கீத கலாநிதி' விருதை, ஏழு மாதங்களுக்கு முன் திருப்பி அளித்துள்ளார்.
ரவிக்கிரணுக்கு, 2017ம் ஆண்டு விருது வழங்கிய மியூசிக் அகாடமி, எம்எஸ் சுப்புலட்சுமி பெயரிலான ரூ.1 லட்சம் விருது, பரிசுத்தொகையையும் வழங்கியிருந்தது. அதை தற்போது திரும்ப மியூசிக் அகாடமியிடமே ஒப்படைத்த ரவிக்கிரண், கூடுதலாக ரூ.10 ஆயிரம் ரூபாயையும் சேர்த்து கொடுத்துள்ளார்.
இது தொடர்பாக மியூசிக் அகாடமி தலைவர் முரளிக்கு எழுதிய கடிதத்தில் அவர் கூறியுள்ளதாவது: மியூசிக் அகாடமி அல்லது அதில் உள்ள நிர்வாகிகளை அவமரியாதை செய்யவோ அல்லது விளம்பரத்திற்காகவோ இந்த விருதுத்தொகையை திருப்பித்தரவில்லை. மூன்று காரணங்களுக்காக இதனை திரும்பக் கொடுக்கிறேன்.முதல் காரணம், 2017ம் ஆண்டு வரை, இறப்புக்கு பிறகு எம்.எஸ்.சுப்புலட்சுமியின் பெயரை களங்கப்படுத்துவதற்கு மியூசிக் அகாடமி தலைவர் முரளி கொந்தளித்து வந்தார்.இரண்டாம் காரணம், மிருதங்க வித்வான் பாலக்காடு ராமச்சந்திர ஐயரை கவுரவிக்கும் வகையில், விருது வழங்கும் அறக்கொடை திட்டம் என்னால் ஏற்படுத்தப்பட்டது. ஆனால், 'சங்கீத கலாநிதி' விருதை திருப்பிக் கொடுத்த நிலையில், இந்த அறக்கொடையை மியூசிக் அகாடமி திருப்பி அளித்துள்ளது.
மூன்றாவது காரணம், சங்கீத கலாநிதி விருதை திரும்பக் கொடுத்தது தொடர்பான மியூசிக் அகாடமியின் தகவல் தொடர்பில் இருந்த, பணத்தை மையப்படுத்திய விமர்சனம் என்னை காயப்படுத்தியது. அதனால் தான் கூடுதலாக, 10 ஆயிரம் ரூபாய் வழங்கியுள்ளேன்.இவ்வாறு ரவிக்கிரண் தெரிவித்துள்ளார்.
டி.எம்.கிருஷ்ணாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ராமச்சந்திர ஐயருக்கு வழங்கப்பட்ட சங்கீத கலாநிதி விருதை திருப்பி அளிப்பதாக அவரது குடும்பமும் தெரிவித்து இருந்தது. மேலும், இந்தாண்டு மியூசிக் அகாடமி நிகழ்ச்சிகளில் இருந்து விலகிக்கொள்வதாக அவரது பேரன் பாலக்காடு ராமபிரசாத், திருச்சூர் சகோதரர்கள், ரஞ்சனி- காயத்ரி, விசாகா ஹரி மற்றும் துஷ்யந்த் ஸ்ரீதர் ஆகியோர் அறிவித்து இருந்தனர்.
டி.எம். கிருஷ்ணாவுக்கு விருது வழங்குவதற்கு எதிராக சுப்புலட்சுமியின் பேரன் சீனிவாசன் தொடர்ந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட், சுப்புலட்சுமி பெயரில் விருது வழங்க மியூசிக் அகாடமிக்கு தடை விதித்து உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.