பழனிசாமி பெயரை சொல்ல வெட்கமாக உள்ளது; ஓபிஎஸ் ஆவேசம்
பழனிசாமி பெயரை சொல்ல வெட்கமாக உள்ளது; ஓபிஎஸ் ஆவேசம்
ADDED : டிச 23, 2025 10:35 PM

சென்னை: பழனிசாமி என்ற பெயரை சொல்லவே நமக்கு வெட்கமாக இருக்கிறது என்று ஓபிஎஸ் ஆவேசமாக விமர்சித்துள்ளார்.
சென்னையில் அதிமுக தொண்டர் உரிமை மீட்புக் கழகத்தின் மாவட்ட செயலாளர்கள், தலைமை கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதில் தொண்டர்கள் மத்தியில் ஓபிஎஸ் பேசியதாவது;
1972ல் தொண்டர்களுக்காக இந்த இயக்கத்தை எம்ஜிஆர் உருவாக்கினார். பின்னர் இந்த இயக்கத்தை தொண்டர்களுக்கான இயக்கமாக உருமாற்றி 3 முறை சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு யாராலும் வெல்ல முடியாத முதல்வராக 10 ஆண்டுகாலம் யாராலும் தர முடியாத ஒரு சிறப்பான ஆட்சியை நாட்டு மக்களுக்கு அர்ப்பணித்தார்கள்.
இன்றைக்கு கட்சி எந்த நிலையில் இருக்கிறது என்பதை நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். கடந்த லோக்சபா தேர்தலில் 7 இடங்களில் டெபாசிட் தொகையை அதிமுக இழந்திருக்கிறது. 7 லோக்சபா தொகுதிகள் என்றால் 42 சட்டமன்ற தொகுதிகள் வருகிறது.
14 லோக்சபா தொகுதிகளில் 3வது இடத்துக்கு சென்றுவிட்டோம். இந்த பழனிசாமி என்ற பெயரை சொல்லவே நமக்கு வெட்கமாக இருக்கிறது. அனைவரையும் ஒருங்கிணைக்க வேண்டும் என்பதற்காக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற வரைமுறையை உருவாக்கினோம்.
தனது ஆதரவாளர்களை கூட்டி வைத்துக் கொண்டு போலியான பொதுக்குழுவை உருவாக்கி, ஒற்றை தலைமை தான் வேண்டும், பழனிசாமி சிறப்பாக கட்சியை நடத்திக் கொண்டு இருக்கிறார், பழனிசாமி சிறப்பாக முதல்வராக இருக்கிறார். அவர் வந்தால் அனைத்து தேர்தல்களிலும் நாம் மாபெரும் வெற்றி அடைவோம் என்று சொல்லி தான், ஒரு மிக பெரிய மாயையை உருவாக்கினார்கள்.
அதற்கு பின்னால் நடந்த 11 தேர்தல்களில் பழனிசாமி பொதுச்செயலாளராக பொறுப்பேற்ற பின்னால் அத்தனையிலும் தோல்வி அடைந்தார். இந்த மாபெரும் இயக்கத்தை இன்று படுபாதாளத்தில் தள்ளி வைத்து, இன்று அனைத்து அதிமுக தொண்டர்களும் வெம்பி,வெதுங்கி என்ன செய்வது என்று திக்குமுக்காடிக் கொண்டு இருக்கிறார்கள்.
அந்த நிலையை உருவாக்கிய பழனிசாமிக்கு வருகின்ற காலங்களில் நாம் சரியான பாடத்தை புகட்ட வேண்டும் என்பது தான் இன்றைய வரலாறு. ஆக நெடுநேரமாக உங்கள் கருத்துகளை, உணர்வுகளை, உணர்ச்சிகளை தெரிவித்து இருக்கிறீர்கள்.
பல கூட்டங்களில் நாம் பல்வேறு பிரச்னைகளை பேசி முடித்துவிட்டோம். இன்றைக்கு மக்கள் நம் மீது அக்கறை கொண்டு இருக்கிறார்கள் என்பது தான் உண்மை. உங்களின் கருத்துகளை அப்படியே நான் முன்மொழிகிறேன். இனி வரும் காலங்களில் தை பிறந்தால் வழிபிறக்கும் என்ற ஒற்றை சொல்லில் நிறுத்தி, வருகை தந்து ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி.
இவ்வாறு ஓபிஎஸ் பேசினார்.

