ரூ.5 கோடி கொடுத்து பேரம் பேசிய ஓபிஎஸ்: தமிழ் மகன் உசேன் 'ஷாக்'
ரூ.5 கோடி கொடுத்து பேரம் பேசிய ஓபிஎஸ்: தமிழ் மகன் உசேன் 'ஷாக்'
ADDED : பிப் 26, 2024 04:27 PM

ராணிப்பேட்டை: உச்சநீதிமன்றத்தில் இபிஎஸ்.,க்கு ஆதரவாக நான் கையெழுத்து போடக்கூடாது என்று என்னிடம் ஆட்களை வைத்து ரூ.5 கோடி கொடுத்து முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் பேரம் பேசினார் என அதிமுக அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் தெரிவித்துள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாப்பேட்டையில் மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் 76வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நடந்த நிகழ்ச்சியில் அதிமுக அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் பேசியதாவது: ஒற்றை தலைமை விவகாரத்தில் இபிஎஸ்.,க்கு ஆதரவாக நான் கையெழுத்து போடக்கூடாது என்பதற்காக முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் என்னிடம் பேரம் பேசினார். அவரது ஆட்களை என் வீட்டிற்கு 5 கோடி ரூபாயுடன் அனுப்பி வைத்தார். ஆனால் பணத்தை திருப்பி எடுத்து செல்லுங்கள் என்று கூறி அனுப்பிவிட்டேன்.
இதைப்பற்றி அதிமுக பொதுச்செயலாளார் இபிஎஸ்., இடம் தெரிவித்தேன். இதனையடுத்து தனியாக அறை எடுத்து 15 அடியாட்களுடன் என்னை பாதுகாப்பாக தங்க வைத்தார். பணத்திற்காகவோ, உயிர் போகும் என்பதற்காகவோ நான் அதிமுக.,வில் வாழ்பவன் இல்லை. நான் மூத்த அரசியல்வாதி என்பதால் என்னுடைய கணிப்பு சரியாக உள்ளதால் வருகிற லோக்சபா தேர்தலுக்கு பிறகு 6 அல்லது 8 மாதத்திற்குள் சட்டசபை தேர்தல் வரும். அந்த தேர்தலில் இபிஎஸ் வெற்றி பெற்று முதல்வராவார். இவ்வாறு அவர் பேசினார்.

