sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 26, 2025 ,மார்கழி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு 'ஆரஞ்ச்' அலெர்ட்!

/

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு 'ஆரஞ்ச்' அலெர்ட்!

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு 'ஆரஞ்ச்' அலெர்ட்!

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு 'ஆரஞ்ச்' அலெர்ட்!

7


UPDATED : டிச 17, 2024 06:20 AM

ADDED : டிச 17, 2024 06:17 AM

Google News

UPDATED : டிச 17, 2024 06:20 AM ADDED : டிச 17, 2024 06:17 AM

7


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு, இன்று முதல் மூன்று நாட்களுக்கு கன மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதில், இரண்டு நாட்களுக்கு, மிக கன மழைக்கான, 'ஆரஞ்ச்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், என்ன மாதிரி பாதிப்பை எதிர்கொள்ள வேண்டி வருமோ என, மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். பாதிப்பை சமாளிக்க மாவட்ட நிர்வாகங்கள் உஷார்படுத்தப்பட்டுள்ளன.

Image 1357650


பயிர்கள் நாசம்


'பெஞ்சல்' புயல், கன மழையால் சென்னை ஓரளவு தப்பினாலும், அதையொட்டிய திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்கள் பாதிப்புக்கு உள்ளாகின.

பூண்டி, புழல், செம்பரம்பாக்கம் ஏரிகள் நிரம்பியதால், உபரி நீர் திறந்து விடப்பட்டது. இதனால், மூன்று மாவட்டங்களின் கரையோர கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கின. வடசென்னையில் கொசஸ்தலை ஆற்றை சுற்றிய பகுதிகள் பாதிப்புக்கு உள்ளாகின.

வெள்ள நீரால் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டு, வேளாண் பயிர்கள் நாசமடைந்தன. இந்த பகுதிகளில், இன்னும் வெள்ள பாதிப்பு தொடர்கிறது. அதில் இருந்து, மக்கள் மீள முயன்று வரும் நிலையில், மீண்டும் கன மழை, மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கை:

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் இன்று கனமழை; செங்கல்பட்டு மாவட்டத்தில் ஓரிரு இடங்களில், கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும்.

இதில், செங்கல்பட்டு மாவட்டத்திற்கு, 20 செ.மீ., மேல் மழை பெய்யும் என்பதற்கான, 'ஆரஞ்சு அலெர்ட்' விடுக்கப்பட்டுள்ளது.

உஷார்


நாளை, சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில், கன முதல் மிக கனமழைக்கான, 'ஆரஞ்சு அலெர்ட்' விடுக்கப்பட்டு உள்ளது.

நாளை மறுதினம், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு, வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில பகுதிகளில், இடி, மின்னலுடன் கூடிய, மிதமான, கனமழை பெய்யக்கூடும்.

இவ்வாறு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இன்று முதல் மூன்று நாட்களுக்கு மழை கொட்டித்தீர்க்கும் என்பதால், எந்த மாதிரியான பாதிப்புகளில் சிக்க வேண்டியிருக்குமோ என்று, மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

பாதிப்பில் சிக்கிய மக்களுக்கு நிவாரணம் என்ற பெயரில், 'போஸ்' கொடுப்பதை தவிர்த்து, அரசுத் துறைகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும், மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

கன மழை எச்சரிக்கையை அடுத்து, சென்னை மாநகராட்சி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்ட நிர்வாகங்கள் உஷார்படுத்தப்பட்டுள்ளன.

அனைத்து துறைகளிலும், வெள்ள தடுப்பு உபகரணங்களான, மணல் மூட்டைகள், சவுக்கு கட்டைகள், படகுகள், மரம் அறுக்கும் இயந்திரங்கள், கயிறு, தார்பாய்கள், மருந்து மாத்திரைகள், பொக்லைன் இயந்திரங்கள், மின் மரவெட்டி, ஆம்புலன்ஸ், நீர் இரைக்கும் இயந்திரங்கள், ஜெனரேட்டர், மின்மாற்றிகள் போதுமான அளவில் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன.

வெள்ள பாதிப்புக்கு உட்படும் பகுதிகளில் வசிக்கும் மக்களில், தன்னார்வலர்கள், வட்டார அளவில் நியமிக்கப்பட்டு, அவர்களுக்கு உரிய பயிற்சி அளிக்கப்பட்டுஉள்ளது.

கிருஷ்ணா நீர் வரத்து


வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததால் பெய்த மழையில், பூண்டி, புழல், சோழவரம், செம்பரம்பாக்கம் ஆகிய நீர்நிலைகளில் நீர்மட்டம், முழு கொள்ளளவை எட்டும் நிலையில் உள்ளது.

இதனால், ஆந்திர மாநிலம், கண்டலேறு அணையில் இருந்து, தமிழகத்திற்கு வந்து கொண்டு இருந்த கிருஷ்ணா நீர் நிறுத்தப்பட்டு, தற்போது மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

நேற்று காலை, 6:00 மணி நிலவரப்படி, தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை ஜீரோ பாயின்ட்டிற்கு, 2 டி.எம்.சி., நீர் வந்துள்ளது.

அவசியமின்றி வெளியே வராதீங்க!

மாவட்ட நிர்வாகங்கள் சார்பில், மக்களுக்கு விடுக்கப்பட்ட அறிவிப்பு: பொதுமக்கள் கன மழையின்போது, ஆறு, ஏரி, குளங்கள் போன்ற ஆழமான நீர் நிலைகள் உள்ள பகுதிகளுக்கு செல்ல வேண்டாம். மின் கம்பம் போன்றவற்றில் கால்நடைகளை கட்டக்கூடாது. அத்தியாவசிய தேவைகளின்றி வீட்டை வீட்டு வெளியே வர வேண்டாம். மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம். பொதுமக்கள், 'டிஎன் அலெர்ட்' செயலியை பதிவிறக்கம் செய்து, அதன் வாயிலாக இயற்கை இடர்பாடுகள் குறித்து, முன்னெச்சரிக்கை செய்திகளை பார்க்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.








      Dinamalar
      Follow us