தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன் ஒப்பந்த பணிகளை முடிக்க உத்தரவு
தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன் ஒப்பந்த பணிகளை முடிக்க உத்தரவு
ADDED : ஜன 30, 2024 06:58 AM

சென்னை: நகரங்களில், 516 கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப்படும் சாலை சீரமைப்புக்கு, பிப்., 15க்குள் ஒப்பந்த பணிகளை முடிக்க வேண்டும் என, மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளுக்கு, நகராட்சி நிர்வாகத்துறை உத்தரவிட்டுள்ளது.
லோக்சபா தேர்தல் தேதி, மார்ச் மாதம் அறிவிக்கப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது. அதற்குள், பல்வேறு வளர்ச்சி மற்றும் மழையால் சேதமடைந்த சாலையை சீரமைக்க, தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
அதன்படி, சென்னை மாநகராட்சியில் 250 கோடி ரூபாய்; மற்ற மாநகராட்சிகள், நகராட்சிகளுக்கு 228 கோடி ரூபாய்; பேரூராட்சிகளுக்கு 38 கோடி ரூபாய் மதிப்பில் சாலை சீரமைப்பு பணிகள் நடக்க உள்ளன.
மொத்தம், 516 கோடி ரூபாய் மதிப்பிலான சாலை சீரமைப்பு பணிக்கான ஒப்பந்தத்தை, பிப்., 15க்குள் முடிக்க, நகராட்சி நிர்வாகத்துறை உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து, நகராட்சி நிர்வாகத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
கடந்தாண்டு வடகிழக்கு பருவ மழையால், பல சாலைகள் சேதமடைந்துள்ளன. மார்ச் மாதம், தேர்தல் அறிவிப்பு வரும்.
அதற்கு முன், சாலை உட்பட அனைத்து விதமான ஒப்பந்தங்களையும் முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. டெண்டர் அளிக்கப்பட்டவுடன், பணிகளையும் விரைந்து மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.