ADDED : நவ 20, 2024 12:29 AM
சென்னை:தமிழக ரேஷன் கடைகளில், கார்டுதாரர்களுக்கு அரிசி, கோதுமை, சர்க்கரை, துவரம் பருப்பு, பாமாயில் போன்றவை வழங்கப்படுகின்றன.
அரிசி, கோதுமையை இந்திய உணவு கழகத்திடமும், மற்ற பொருட்களை தனியார் நிறுவனங்களிடமும், தமிழக நுகர்பொருள் வாணிப கழகம் வாங்குகிறது. அவை, கிடங்குகளில் இருப்பு வைக்கப்பட்டு, ரேஷன் கடைகளுக்கு வினியோகம் செய்யப்படுகின்றன. சில இடங்களில், அரிசி உள்ளிட்ட பொருட்கள் தரமற்று இருப்பதாக புகார்கள் எழுகின்றன.
பொருட்களின் தரத்தை, கார்டுதாரர்கள் தெரிந்து கொள்வதற்காக, ஒவ்வொரு பொருளின் மாதிரியையும், கடைக்கு முன் சிறிய பாத்திரங்களில் வைத்து காட்சிப்படுத்த வேண்டும் என்று, ரேஷன் ஊழியர்களுக்கு, அரசு உத்தரவிட்டுள்ளது.இதுகுறித்து, கூட்டுறவு மற்றும் உணவுத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'ரேஷன் கடைகளுக்கு, அரிசி உட்பட அனைத்து பொருட்களும் தரமானதாக அனுப்பப்படுகின்றன. பலர் அரிசி வாங்குவதில்லை.
எனவே, அரிசி உட்பட அனைத்து பொருட்களின் தரத்தையும், கார்டுதாரர்கள் எளிதில் தெரிந்து கொள்ள, கடை முன் காட்சிப்படுத்த உத்தரவிடப்பட்டு உள்ளது' என்றார்.