'பிராட்பேண்ட்' கட்டண பாக்கி ரூ.1.5 கோடி செலுத்த உத்தரவு
'பிராட்பேண்ட்' கட்டண பாக்கி ரூ.1.5 கோடி செலுத்த உத்தரவு
ADDED : டிச 22, 2024 01:33 AM

சென்னை:அரசு பள்ளிகளின் இணையதள பயன்பாட்டுக்கான கட்டணம், 1.5 கோடி ரூபாயை, பி.எஸ்.என்.எல்., நிறுவனத்திற்கு செலுத்துமாறு பள்ளிக்கல்வி துறை உத்தரவிட்டு உள்ளது.
அரசு உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் உயர் தொழில்நுட்பத்திலான ஆய்வகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில், பி.எஸ்.என்.எல்., நிறுவனம் வழங்கும், 'பிராட்பேண்ட்' இணைய சேவை பயன்படுத்தப்படுகிறது.
அதற்கான கட்டணத்தை, பல்வேறு பள்ளிகள் முறையாக செலுத்தாமல் இருப்பதாகவும், அந்த வகையில், பி.எஸ்.என்.எல்., நிறுவனத்துக்கு 1.5 கோடி ரூபாய் நிலுவை உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து, முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு, பள்ளி கல்வித்துறை அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
அரசு உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளின் உயர் தொழில்நுட்ப ஆய்வகங்களில் உள்ள, 'பிராட்பேண்ட்' சேவைக்கான நிதி, 'சமக்ர சிக் ஷா' திட்டத்தின் வாயிலாக வழங்கப்படுகிறது. ஆனால், சேவை கட்டணம், 1.5 கோடி ரூபாய் வரை நிலுவையில் உள்ளது.
அதை உடனே கட்டவில்லை என்றால், சேவை துண்டிக்கப்படும் என்று, பி.எஸ்.என்.எல்., நிறுவனம் தெரிவித்துள்ளது.
எனவே, அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களும், நிலுவை தொகையை உடனே செலுத்துமாறு, தலைமை ஆசிரியர்களை அறிவுறுத்த வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.