ADDED : அக் 15, 2024 09:23 PM
சென்னை:இந்திய உணவு கழகம் சார்பில், தமிழக விவசாயிகளிடம் இருந்து, தமிழக நுகர்பொருள் வாணிபக் கழகம் நெல் கொள்முதல் செய்கிறது. இந்த நெல், அரிசியாக மாற்றப்பட்டு ரேஷன் கடைகளில் வழங்கப்படுகின்றன.
கடந்த செப்டம்பர் முதல் நடப்பு சீசன் துவங்கிய நிலையில், விவசாயிகளிடம் இருந்து நேரடி கொள்முதல் நிலையங்கள் வாயிலாக, தினமும் நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.
வடகிழக்கு பருவமழை சீசன் துவங்கியதால், சென்னை உட்பட பல மாவட்டங்களில் கனமழை பெய்கிறது.
எனவே, கொள்முதல் நிலையங்களில் வாங்கப்படும் நெல்லை, விரைவாக அரிசி ஆலைகள் மற்றும் கிடங்குகளுக்கு அனுப்பி பாதுகாப்பாக வைக்குமாறு, வாணிபக் கழக மேலாளர்களுக்கு, உணவு துறை உத்தரவிட்டுள்ளது. இதற்காக, 24 மணி நேரமும் மூன்று, 'ஷிப்ட்'களில் ஊழியர்கள் பணிபுரிகின்றனர்.
சென்னை மற்றும் அதை சுற்றிய மாவட்டங்களில், நேற்று முன்தினம் இரவு முதல் கனமழை பெய்து வருகிறது.
அன்றைய நிலவரப்படி, செங்கல்பட்டு மாவட்டத்தில், 20,935 டன் நெல்லும், காஞ்சிபுரத்தில், 10,378 டன் நெல்லும், பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டு உள்ளன.
செங்கல்பட்டில் உள்ள நேரடி கொள்முதல் நிலையங்களில், 2,800 டன்; திருவள்ளூரில், 240 டன் நெல் கையிருப்பில் உள்ளது.