ஆர்டர்லி முறையை ஒழிக்கணும்! டி.ஜி.பி.க்கு உத்தரவிட்டதாக ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல்
ஆர்டர்லி முறையை ஒழிக்கணும்! டி.ஜி.பி.க்கு உத்தரவிட்டதாக ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல்
ADDED : நவ 29, 2024 05:38 PM

சென்னை: ஆர்டர்லி முறையை முழுமையாக ஒழிக்க வேண்டும் என்று தமிழக காவல்துறை டி.ஜி.பி.,க்கு உள்துறை செயலாளர் உத்தரவிட்டுள்ளதாக சென்னை ஐகோர்ட்டில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
காவலர்களை போலீஸ் உயரதிகாரிகளுக்கு உதவியாக பயன்படுத்தும் முறைக்கு ஆர்டர்லி முறை என்று பெயர். 19ம் நூற்றாண்டில் ஆங்கிலேயர்களால் காவல்துறையில் இந்த முறை புகுத்தப்பட்டது. ஆனால் காலப்போக்கில் உயரதிகாரிகளின் வீட்டு வேலைகள் செய்ய காவலர்கள் பயன்படுத்தப்பட்டனர்.
இந் நிலையில், புழல் மத்திய சிறையில் கைதிகளுக்கு உரிய வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை என்று சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இதை விசாரித்த நீதிமன்றம், தமிழகம் முழுவதும் உள்ள சிறை வார்டன்கள், காவலர்களை வீட்டு வேலைகளுக்கு பயன்படுத்தும் அதிகாரிகள் பற்றி சி.பி.சி.ஐ.டி., மற்றும் உளவுத்துறை உதவியுடன் உரிய விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யுமாறு உள்துறை செயலாளருக்கு ஆணையிட்டு இருந்தது.
இன்று (நவ.29) இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, உள்துறை செயலாளரின் அறிக்கை கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது. காவலர்களை வீடுகள் அல்லது தனிப்பட்ட வேலைகளுக்கு பயன்படுத்தும் அதிகாரிகள் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய டி.ஜி.பி.,க்கு உள்துறை செயலாளர் உத்தரவிட்டுள்ளதாக அப்போது அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மேலும் ஆர்டர்லி முறையை முழுமையாக ஒழிக்க வேண்டும். வீட்டு வேலைகளை செய்யும் காவலர்களை உடனடியாக சிறைப்பணிக்கு மாற்றம் செய்ய டி.ஜி.பி.,க்கு உத்தரவிட்டு உள்ளதாகவும் அரசு தரப்பில் கூறப்பட்டது. இதையடுத்து இந்த விசாரணை டிச.20ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

